#Kolkata மருத்துவர் கொலை வழக்கு – சஞ்சய் ராய் குற்றவாளி என தீர்ப்பு!
கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி கார் அரசு மருத்துவமனையில் கடந்த ஆகஸ்ட் மாதம் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த கொடூர சம்பவத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டமும் வெடித்தது.இந்த வழக்கு தொடர்பாக மருத்துவமனையில் பணியாற்றிய சஞ்சய் ராய் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கின் விசாரணையை சிபிஐ-க்கு மாற்றி கொல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி சிபிஐ அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். மறுபுறம் இந்த விவகாரத்தில், தானாக முன்வந்து வழக்காக பதிவு செய்து கொண்ட உச்சநீதிமன்றம், மருத்துவமனைகளில் மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான பரிந்துரைகளை வழங்க சிறப்புக்குழு ஒன்றை நியமித்தது.
இதற்கிடையே இந்த வழக்கு சீல்டா மாவட்ட கூடுதல் மற்றும் செசன்ஸ் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. இதில் 50 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். இந்த விசாரணை அனைத்தும் கடந்த 9-ந்தேதி நிறைவடைந்தது. நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த வழக்கில் குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என சிபிஐ தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இந்த நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பப்பட்டது.
அதன்படி, கொல்கத்தா பயிற்சி மருத்துவர் கொலை வழக்கில் கைதான சஞ்சய் ராய் குற்றவாளி என கொல்கத்தா சியால்தா நீதிமன்றம் தீர்ப்புளித்துள்ளது. மேலும், நாளை மறுநாள் (ஜன.20) தேதி தண்டனை விவரங்கள் தெரிவிக்கப்படும் எனவும் சியால்தா நீதிமன்றம் அறிவித்துள்ளது.