கோவில்பட்டியில் நாய்கள் கடித்து 6 ஆடுகள் உயிரிழப்பு!
கோவில்பட்டியில் நாய்கள் கடித்து 6 ஆடுகள் உயிரிழப்பு மற்றும் 9 ஆடுகள் படுகாயம் அடைந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள பிள்ளையார் நத்தம் கிராமத்தை
சேர்ந்தவர் பாண்டியராஜ்(44). வடக்கு பகுதியில், இவரது நிலத்தில் வீடு கட்டி குடியிருந்து வருகிறார். மேலும் வீட்டின் தோட்டத்தில் தொழு அமைத்து அதில் 15 வெள்ளாடுகள் வளர்ந்து வந்துள்ளார். இந்நிலையில், இன்று அதிகாலையில் தொழுவில் இருந்த ஆடுகள் சத்தம் கேட்பதை
கேட்டு பாண்டியராஜ் வெளியே வந்து பார்த்துள்ளார்.
அப்போது தொழுவில் இருந்த ஆடுகளை 5 கும் மேற்பட்ட நாய்கள் கடித்து குதறி கொண்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதில் சம்பவ இடத்திலேயே 6 ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்தன. 9 ஆடுகள் காயம் அடைந்தன. இதனைத் தொடர்ந்து தகவல்அறிந்து, வந்த கால்நடை மருத்துவ குழுவினர் காயமடைந்து உயிருக்கு போராடி கொண்டு இருந்த ஆடுகளுக்கு சிகிச்சை அளித்தனர்.
மேலும் இப்பகுதியில் நாய்கள் தொல்லை காரணமாக விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதாகவும் , தெருநாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாண்டியராஜ் தெரிவித்துள்ளார். நாய்கள் தொல்லை காரணமாக ஆடுகள் இறந்த சம்பவம் அப்பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.