கோலி, ருதுராஜ் அபாரம்... தென் ஆப்பிரிக்காவுக்கு 359 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா....!
தென்னாப்பிரிக்கா – இந்தியா இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி சத்தீஷ்கர் மாநிலம் ராய்ப்பூரில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 358 ரன்கள் குவித்துள்ளது.
இந்திய அணியில் தரப்பில் விராட் கோலி மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
ருதுராஜ் கெய்க்வாட் 83 பந்துகளில் 105 ரன்கள் விளாசி சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். அதே போல், வீரர் விராட் கோலியும் 93 பந்துகளில் 102 ரன்கள் குவித்தார்.
அணியின் கேப்டனான கே.எல். ராகுலும் 43 பந்துகளில் 66 ரன்கள் விளாசினார். இதனால் அணியின் ஸ்கோர் கனிசமான அளவு உயர்ந்தது. தென் ஆப்பிரிக்க அணி சார்பில் மார்கோ ஜென்சென் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதையடுத்து 359 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி தென் ஆப்பிரிக்க அணி விளையாட உள்ளது.