For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

கோடநாடு கொலை, கொள்ளை தொடர்பான மானநஷ்ட  வழக்கை உயர் நீதிமன்றத்திற்கு திரும்பி அனுப்பியது மாஸ்டர் நீதிமன்றம்!

04:25 PM Jan 31, 2024 IST | Web Editor
கோடநாடு கொலை  கொள்ளை தொடர்பான மானநஷ்ட  வழக்கை உயர் நீதிமன்றத்திற்கு திரும்பி அனுப்பியது மாஸ்டர் நீதிமன்றம்
Advertisement

கோடநாடு கொலை, கொள்ளை தொடர்பான மானநஷ்ட வழக்கில் சாட்சியப்பதிவு நடைமுறையை வேறு தேதிக்கு மாற்றி வைக்க வேண்டுமென அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டதை அடுத்து, வழக்கை உயர் நீதிமன்றத்திற்கு அனுப்பி மாஸ்டர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி வீடியோ வெளியிட்ட டெல்லியை சேர்ந்த பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல், வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சயான் மற்றும் வாளையார் மனோஜ் ஆகியோருக்கு எதிராக 2019-ம் ஆண்டு தற்போது அதிமுக பொதுச் செயலாளராக உள்ள எடப்பாடி பழனிசாமி, ஒரு கோடியே 10 லட்ச ரூபாய் மான நஷ்ட ஈடு கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கில் சாட்சியங்களை பதிவு செய்வதற்காக வழக்கை மாஸ்டர் நீதிமன்றத்திற்கு அனுப்பி வைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்க இயலாது எனவும், தமது வீட்டில் சாட்சியத்தை பதிவுசெய்ய வழக்கறிஞர் ஆணையரை நியமிக்க வேண்டுமெனவும் கோரி இபிஎஸ் சார்பில் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.  இந்த மனுவை ஏற்ற உயர்நீதிமன்றம், நேரில் ஆஜராக அவருக்கு விலக்கு அளித்து, இந்த நடைமுறையை அவரது வீட்டில் மேற்கொள்வதற்காக வழக்கறிஞரை நியமித்தது.

இந்த உத்தரவை எதிர்த்து மேத்யூ சாமுவேல் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு வழக்கு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது ஷஃபிக் அமர்வில் கடந்தமுறை விசாரணைக்கு வந்த போது, எடப்பாடி பழனிசாமி ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என கூறக் கூடிய காரணங்கள் ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை என தெரிவித்த நீதிபதிகள், உரிய அறிவுறுத்தல் வழங்கும்படி இபிஎஸ் தரப்பு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டிருந்தனர்.

இதையும் படியுங்கள்: ‘தக் லைஃப்’ முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவு – ரஷ்யா செல்லும் படக்குழு!

இந்த வழக்கு ஜன.5-ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்த போது எடப்பாடி பழனிசாமி, பொங்கல் விடுமுறை மற்றும் சட்டப்பேரவை நடைபெற உள்ளதால் அதன்பின்னர் ஆஜராக தயாராக இருப்பதாக விளக்கம் அளிக்கப்பட்டது.  பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ஜனவரி 30, 31-ம் தேதி ஆகிய இரண்டு நாட்கள் சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாஸ்டர் நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி ஆஜராகி சாட்சியமளிக்க உத்தரவிட்டனர்.

இந்தநிலையில் இந்த வழக்கில் சாட்சியப்பதிவு நடைமுறையை வேறு தேதிக்கு மாற்றி வைக்க வேண்டுமென அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் மாஸ்டர் நீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது.   இதனை ஏற்று கொண்ட மாஸ்டர் நீதிமன்றம்,  வழக்கை சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதிக்கு திரும்ப அனுப்பியுள்ளது.

Tags :
Advertisement