#Bihar | இளைஞரின் வயிற்றில் இருந்த கத்தி, நகம் வெட்டி... மருத்துவர்கள் அதிர்ச்சி!
பீகாரில் இளைஞரின் ஒருவரின் வயிற்றில் இருந்து கத்தி, நகம் வெட்டி, கீ செயின் உள்ளிட்ட உலோக பொருட்களை மருத்துவர்கள் அகற்றி உள்ளனர்.
பீகார் மாநிலத்தின் கிழக்கு சம்பாரண் மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயதான இளைஞர் ஒருவர் கடும் வயிற்று வலியினால் அவதிபட்டுள்ளார். இதனால், அவரது பெற்றோர் அவரை மோதிஹரி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இளைஞரை பரிசோதித்த மருத்துவர்கள் அவரது வயிற்றில் ஏதோ வித்தியாசமான பொருட்கள் இருப்பதை கண்டனர். உடனடியாக இளைஞருக்கு அறுவை சிகிச்சை அவசியம் என்று கூறி அதற்கான ஏற்பாடுகளை செய்தனர்.
உடனடியான மருத்துவர் அமித் குமார் தலைமையிலான மருத்துவர்கள் இளைஞருக்கு அறுவை சிகிச்சை செய்தனர். அறுவை சிகிச்சை முடிந்த பின்னர் இளைஞனின் வயிற்றில் இருந்த பொருட்களை பார்த்த மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். கொத்துச்சாவி, சிறிய வகை கத்தி, நகம் வெட்டி, கீ செயின் உள்ளிட்ட பல உலோக பொருட்கள் அவரது வயிற்றில் இருந்து மருத்துவர் அகற்றியுள்ளனர்.
இதுகுறித்து அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர் அமித்குமார் கூறியதாவது, "அறுவை சிகிச்சைக்குப் பின் இளைஞர் நல்ல உடல்நலத்துடன் உள்ளார். அவர் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளார். அவர் அதற்காக மருந்துகளும் எடுத்துக் கொள்கிறார். சமீப காலமாக அவர் உலோக பொருட்கள் விழுங்கி வந்துள்ளார். அவர் விரைவில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்" என்றார்.