KKRvsSRH | சதம் விளாசிய கிளேசென் - கொல்கத்தாவுக்கு 279 ரன்கள் இலக்கு!
ஐபிஎல் லீக் சுற்றின் 68வது போட்டி, பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஹைதராபாத் அணிக்கும், அஜிங்க்யா ரஹானே தலைமையிலான கொல்கத்தா அணிக்கும் இடையே இன்று(மே.25) நடைபெற்று வருகிறது. அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி முதல் இன்னிங்ஸை தொடங்கிய ஹைதராபாத் அணியில், தொடக்கவீரர்களாக அபிஷேக் சர்மா மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகியோர் களமிறங்கினர். இருவரும் பவர் ப்ளேவில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நிலையில், சுனில் நரைன் வீசிய 7வது ஓவரில் அபிஷேக் சர்மா 32 ரன்களுடன் ஆட்டமிழந்தார்.
இதையடுத்து டிராவிஸ் ஹெட் உடன் கிளேசென் கைகோர்த்தார். இருவரும் இணைந்து கொல்கத்தா பவுலர்களை பந்தாடி வந்த நிலையில், சுனில் நரைனின் சுழலில் சிக்கி டிராவிஸ் ஹெட் 76 ரன்களுடன் அவுட்டானார். இவருக்கடுத்து வந்த இஷான் கிஷன் 29 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.
இறுதி வரை அவுட்டாகாமல் களத்தில் நின்ற கிளேசென், 39 பந்துகளில் மொத்தம் 9 சிக்ஸர்கள் மற்றும் 4 பவுண்டரிகளுடன் சதம் விளாசி (105*) அசத்தினார். இதன் மூலம் ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழந்து 278 ரன்கள் குவித்தது. தொடர்ந்து 279 ரன்களை கொல்கத்தா அணி சேஸிங் செய்ய உள்ளது.