"நவீன கிரிக்கெட் உலகின் முடிசூடா மன்னன்" - கிங் கோலி ...!
நவீன கிரிக்கெட் உலகின் முடிசூடா மன்னனாக திகழ்ந்து வரும் விராட் கோலியின் சாதனை குறித்து விரிவாக அலசுகிறது இந்த தொகுப்பு.
சாதனைகள் படைப்பது எளிதல்ல, அதே சாதனைகளை முறியடிப்பது அரிதிலும் அரிது. சில சரித்திர நிகழ்வுகள் நிகழும் போது தான், நம்மை சார்ந்தவர்களுக்கும், நம்புபவர்களுக்கும், நெகிழ்ச்சியான மற்றும் உணர்வுப்பூர்வமான அனுபவங்களை நீங்கள் கொடுத்திட முடியும். கிரிக்கெட் உலகிற்கு அத்தகைய உணர்வுப்பூர்வமான தருணத்தை பரிசளித்திருக்கிறார் இந்த நவீன கிரிக்கெட் உலகின் முடிசூடா மன்னன் கிங் கோலி.
"கிரிக்கெட்டின் கடவுள் என போற்றப்படும் சச்சின் டெண்டுல்கரின் எண்ணற்ற சாதனைகள் முறியடிக்கப்பட வேண்டுமென்றால், அதற்காக ஒருவர் தனது வாழ்நாள் முழுவதும் கிரிக்கெட்டில் முழுமையாக செலவிட வேண்டும்" எனும் பலரின் கூற்றை தகர்த்தெரிந்து, அவரது ஒவ்வொரு ரெக்கார்டுகளையும் முறியடித்து, அவற்றை எதிர்கால சந்ததியினரின் பாட புத்தகங்களில் இடம்பெற செய்துவருகிறார் கிங் கோலி.
அதன்படி, சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில், யாராலும் நெருங்கக் கூட முடியாது என்று சொல்லப்பட்ட சச்சின் டெண்டுல்கரின் 49 சதங்களை கடந்து, புதிய சரித்திரத்தை எழுதியிருக்கிறார் விராட் கோலி. தான் ஆடும் ஒவ்வொரு இன்னிங்ஸிலும் முழு பங்களிப்பை கொடுக்கும் ஒருவரால் மட்டுமே, சச்சினின் சாதனைகளை நெருங்க முடியும். ஏனெனில் அதற்காக அவர் எடுத்துக்கொண்ட காலம் என்பது ஒரு சகாப்தத்துடன் முடிந்துவிடவில்லை.
ஆனால் கோலியோ, சர்வதேச கிரிக்கெட்டில் 26,000*க்கும் மேற்பட்ட ரன்கள், 80* சதங்கள், 137* அரைசதங்கள் என தன் பெயருக்கு பின்னால் இருக்கும் பிரமாண்ட புள்ளி விவரங்களை, தனது ஒவ்வொரு சொட்டு வியர்வை துளிகளாலும் கட்டமைத்திருக்கிறார். ஆம், ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 13,000 ரன்கள், சேசிங்கின் போது மட்டுமே 92 இன்னிங்ஸ்களில் அதிவேகமாக 5,490* க்கும் மேல் ரன்கள் குவிப்பு, ஒரு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் 8 முறை 50 + ரன்கள் குவிப்பு என, அடுத்தடுத்து சச்சினின் அடுக்கடுக்கான சாதனைகளை முறியடித்து வருகிறார் இந்த கிங் கோலி.
குறிப்பாக 2003 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில், சச்சின் டெண்டுல்கர் ஒட்டுமொத்தமாக விளாசிய 673 ரன்களே, ஒரு உலகக் கோப்பை தொடரில் தனி ஒரு பேட்டரின் அதிகபட்ச ஸ்கோராக இருந்து வந்தது. ஆனால் நடப்பு உலகக் கோப்பை தொடரில், அந்த சாதனையை 10 இன்னிங்ஸ்களிலேயே முறியடித்து, தனது பெயரை முன்னிலை படுத்திக் கொண்டார் கோலி.
அதே போல டெண்டுல்கரின் லைஃப் டைம் அச்சீவ்மெண்ட்டாக பர்க்கப்பட்ட 49 ஓடிஐ சதங்களை, யாராலும் நெருங்கக் கூட முடியாது என்ற விமர்சனங்கள் வலுவாகவே இருந்து வந்தன. இந்த விமர்சனங்கள் எல்லாம் விராட் கோலி சுவாசிக்கும் காற்றில் கூட உலாவி இருக்கக் கூடும். ஆனால் அவற்றை கூடுதல் சுவாசமாக எடுத்துக் கொண்ட விராட் கோலி, தனது கரியரின் 80 சதவிகித பயணத்திலேயே, சச்சினின் லைஃப் டைம் அச்சவ்மெண்ட்டை தொட்டு விட்டார்.
நியூசிலாந்து அணிக்கு எதிரான உலகக் கோப்பை கிரிக்கெட் அரையிறுதிப் போட்டியில் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் தனது 50* ஆவது சதத்தை விளாசினார் கோலி. மைதானமே ஆர்ப்பரித்து போனது.
சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 49 சதங்கள் விளாசிய டெண்டுல்கருக்கு, இந்த மாபெரும் இலக்கை எட்ட சரியாக 463 போட்டிகள் தேவைப்பட்டது. ஆனால் விராட் கோலியோ அதனை தனது 291 போட்டிகளிலேயே எட்டி, 50* சதங்களாக விளாசி, சச்சினின் வாழ்நாள் சாதனையை முறியடித்தார். உலகமே வியந்து பார்க்கும் இந்த சாதனையை கோலி படைத்ததன் மூலம், சச்சினின் பெருமைமிகு கிரீடத்தை, அவர் தலையில் இருந்து எடுத்து, அதனை கோலிக்கு பொருத்தியது போன்று கற்பனை காட்சிகளை நாம் அனைவராலும் உணர்ந்திட முடிந்தது.
The first time I met you in the Indian dressing room, you were pranked by other teammates into touching my feet. I couldn’t stop laughing that day. But soon, you touched my heart with your passion and skill. I am so happy that that young boy has grown into a ‘Virat’ player.
— Sachin Tendulkar (@sachin_rt) November 15, 2023
தனது ஆதிக்கம் மிகுந்த இந்த விளையாட்டு திறனால், கிரிக்கெட்டில் காலத்தால் அழியாத பல பெருமைகளை இந்தியாவிற்கும், தனது ரசிகர்களுக்கும் சமர்ப்பித்துள்ளார் கோலி. அவரது இந்த சரித்திர சாதனையை பாராட்டு வாழ்த்து தெரிவித்துள்ள மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர், “ஒரு இந்திய வீரர் எனது சாதனையை முறியடித்ததை காட்டிலும் ஒரு மகிழ்ச்சியான நிகழ்வு இருந்திட முடியாது. உலகக் கோப்பை அரையிறுதியில் அதுவும் எனது சொந்த ஊரில், விராட் கோலி இந்த உலக சாதனை படைத்திருப்பது பெருமகிழ்ச்சி தருகிறது என தனது x தளத்தில் பதிவிட்டுள்ளார்.
தனது சிறு வயதில், நம்பிக்கை மிகுந்த கனவுகளுடன், தொலைக்காட்சிகளில் சச்சினை பார்த்து வளர்ந்த விராட் கோலி, அதே சச்சினின் முன்பு, மும்பையில் இந்த மாபெரும் உலக சாதனையை படைத்திருக்கிறார். இனி விராட் கோலி படைத்த இந்த சாதனையை ஒருவர் முறியடிக்க வேண்டுமென்றால், அதற்கு குறைந்தபட்சம் 10 முதல் 15 வருடங்களாவது தேவைப்படும். அதுவரை அவரது தலையில் பொருத்தப்பட்டு இருக்கும் கிரீடத்தை பெருமையுடன் தன்வசம் வைத்திருப்பார் விராட்ட கோலி....
- நந்தா நாகராஜன்.