வசமாக சிக்கிய கிட்னி விற்பனை கும்பல் - விசாரணையில் கிடைத்த அதிர்ச்சி!
பள்ளிபாளையத்தைச் சேர்ந்த முருகன் என்ற இடைத்தரகர், ஏழ்மை நிலையில் உள்ள தொழிலாளர்களை மூளைச்சலவை செய்து, அவர்களின் சிறுநீரகங்களை விற்பனை செய்யும் கொடூரச் செயலில் ஈடுபட்டு வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனை தொடர்ந்து சிறுநீரகம் தானம் செய்யத் தயாராக இருப்பவர்களின் பட்டியல், அவர்களுக்கு அளிக்கப்பட வேண்டிய பணம் குறித்த விவரங்கள் ஆகியவை அம்பலமாகியுள்ளன.
முருகனின் கிட்னி விற்பனை குறித்த ஆடியோ ஆதாரங்கள் வெளியாகி, மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. போலி ஆவணங்களைத் தயாரித்து இந்தச் சட்டவிரோத செயலில் முருகன் ஈடுபட்டதும் தெரிய வந்தது.
மேலும் சட்டவிரோத கிட்னி விற்பனை குறித்து நியூஸ் 7 தமிழ் விரிவான கள ஆய்வு செய்திகளை வெளியிட்டது. இந்தச் செய்தியின் எதிரொலியாக, உடனடியாக அரசு நடவடிக்கை எடுத்தது.
இந்நிலையில் இந்தக் சட்டவிரோத செயல்களுக்கு உடந்தையாக இருந்த ஈரோடு அபிராமி கிட்னி கேர் மருத்துவமனைக்கு, மருத்துவத்துறை சட்டத்தின் படி வழங்கப்பட்ட வரையறுக்கப்பட்ட ஒப்புதலை ரத்து செய்து தமிழ்நாடு மருத்துவம் ஊரக நலப்பணிகள் துறை உத்தரவிட்டுள்ளது.
மேலும், இந்த மருத்துவமனையில் அனைத்து வகையான அறுவை சிகிச்சைகளும் மேற்கொள்ள இடைக்காலத் தடை விதித்தும் அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதுபோன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.