Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

காதலிக்க மறுத்த பெண்ணின் அண்ணன் கடத்தல் - நண்பருக்காக கடத்தலில் இறங்கிய மூன்று பேர் கைது... ஒருவருக்கு வலைவீச்சு!

காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியின் அண்ணனை கடத்திய வாலிபர்கள் 3 பேர் கைது...
10:03 PM Mar 21, 2025 IST | Web Editor
Advertisement

கோவை, போத்தனூர் பகுதியைச் சேர்ந்த 20 வயது கல்லூரி மாணவி, சுங்கம் பகுதியில் உள்ள கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இவருக்கு கடந்த 1 வருடத்திற்கு முன்பு அவரது தோழி மூலம் சூர்யா என்பவர் அறிமுகமானார். தோழியின் நண்பர் என்பதால் கல்லூரி மாணவி அவருடன் பேசி வந்து உள்ளார்.

Advertisement

இந்த நிலையில் ஒருநாள் சூர்யா கல்லூரி மாணவியை செல்போனில் தொடர்பு கொண்டு, நான் உன்னை காதலிக்கிறேன் என்று கூறி உள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவி, சூர்யாவிடம் தனக்கு படிப்பு தான் முக்கியம்; காதலிக்க விருப்பமில்லை என்று கூறியுள்ளார். அதனைத்தொடர்ந்து சூர்யா அடிக்கடி மாணவிக்கு போன் செய்து வந்துள்ளார்.

இதனால் கல்லூரி மாணவி சூர்யாவின் நம்பரை “பிளாக்” செய்துள்ளார். செல்போனில் நம்பரை பிளாக் செய்து விட்டதால், மாணவியை அடிக்கடி கல்லூரியின் அருகே சந்தித்து தன்னை காதலிக்கும்படி சூர்யா வற்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் பயந்த மாணவி இந்த சம்பவம் குறித்து தனது சகோதரர் பிரவீன் குமார் இடம் கூறி அழுதுள்ளார்.

பிரவீன் குமார் இதுகுறித்து தான் சூர்யாவிடம் கேட்பதாக கூறி தைரியம் கொடுத்து உள்ளார். இந்த நிலையில் கடந்த 14ஆம் தேதி மாணவி அவரது தோழியுடன் கல்லூரி முடிந்து நடந்து சென்று கொண்டிருந்தபோது, அங்குவந்த சூர்யா  மாணவியிடம் மீண்டும் தன்னை காதலிக்கும் படி கூறி வற்புறுத்தி உள்ளார். அப்போது மாணவி செல்போனில் தனது அண்ணனை தொடர்பு கொண்டு அங்கு நடந்தவற்றை கூறியுள்ளார். உடனே சம்பவ இடத்திற்கு பிரவீன் மற்றும் அவரது நண்பர்கள் விரைந்துள்ளனர்.

சூர்யாவிடம் ஏன் தனது சகோதரியிடம் தகராறு செய்கிறாய் என்று பிரவீன் குமார்
மற்றும் அவரது நண்பர்கள் தட்டிக் கேட்டுள்ளனர். அப்போது பிரவீன் குமார் உடன் வந்த அவரது நண்பர் தருண் என்பவர் சூர்யாவை கடுமையாக பேசி எச்சரித்ததாக கூறப்படுகிறது. இதனால் சூர்யாவிற்கு தருண்மீது ஆத்திரம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்று 20ஆம் தேதி, மாணவியின் அண்ணன் பிரவீன் குமார் போத்தனூர் ரயில்வே திருமண மண்டபம் அருகில் உள்ள பஸ் நிறுத்தத்தில் கல்லூரிக்கு செல்வதற்காக நின்று கொண்டிருந்தார். அப்போது அவரை சூர்யா அவரது நண்பர்களுடன் சேர்ந்து காரில் கடத்தி சென்றதாக கூறப்படுகிறது.

அதன் பிறகு மாணவியை தொடர்பு கொண்ட சூர்யா நீ என்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும். நான் உனது சகோதரன் பிரவீன் குமாரை கடத்தி வைத்துள்ளேன். மேலும் பிரவீன் குமாரின் நண்பன் தருணை என்னிடம் அழைத்து வந்து ஒப்படைத்து விட்டு, உனது சகோதரன் பிரவீன் குமாரை திரும்ப அழைத்துச் செல் என்று கூறிவிட்டு ஃபோனை கட் செய்துவிட்டார்.

இதனைக்கேட்ட மாணவி உடனே தருணை தொடர்பு கொண்டு நடந்த சம்பவத்தை
கூறி அழுது உள்ளார். அதன் பிறகு மாணவி, தருணை அழைத்துக் கொண்டு சூர்யா குறிப்பிட்ட செட்டிபாளையம், பேக்கரி கடைக்கு சென்றனர். அப்போது மாணவி மற்றும் தருண் உடன் பாதுகாப்புக்கு மாணவியின் உறவினர் விஜய் ,
தருணின் நண்பர் ஆகியோரும் சென்றனர்.

சூர்யா கூறிய பேக்கரிக்கு அருகில் சென்றதும், சூர்யா மாணவியை மீண்டும் செல்போனில் தொடர்பு கொண்டு, ஒரு காரின் நம்பரை கூறி அந்த காரை பின் தொடர்ந்து வரும்படி கூறியுள்ளார். அந்த காரில்தான் அவரது சகோதரர் பிரவீன் குமார் இருப்பதாக தெரிவித்துள்ளார். இதனால் மாணவி மற்றும் தருண், சூர்யா கூறிய காரை பின் தொடர்ந்து சென்றனர்.

செட்டிபாளையம் ரோட்டில் சிறிது தூரம் சென்றதும் சூர்யா காரை நிறுத்தியுள்ளார். அதன் பிறகு மாணவியிடம் தருணை தன்னிடம் அனுப்பி வைக்கும் படியும், அதன் பிறகு உனது சகோதரன் பிரவீன் குமாரை அனுப்பி வைப்பதாகவும் கூறியுள்ளார். உடனே சூர்யா தருணை தன்னிடம் அனுப்பி வைக்காவிட்டால் காரில் இருக்கும் பிரவீன் குமாரை கொன்று விடுவதாக கூறி மிரட்டி உள்ளார்.

இதைக்கேட்டு மாணவி அதிர்ச்சி அடைந்து சத்தம் போட்டு உள்ளார். இதனால் அங்கு ஏராளமானவர்கள் கூடி விட்டனர். அதன் பிறகு சூர்யா மற்றும் அவருடன் வந்தவர்கள் பிரவீன் குமாரை காரில் இருந்து இறக்கி விட்டு விட்டு தப்பி சென்றுள்ளனர். நேற்று காலை கடத்தப்பட்ட பிரவீன் குமார் நள்ளிரவில் இறக்கி விடப்பட்டுள்ளார்.

அப்போது காருக்குள் இருந்த பிரவீன் குமாரை காரில் இருந்த சூர்யாவின் நண்பர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட மாணவி போத்தனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் ரவி சம்பவம் குறித்து விசாரணை நடத்தினார். இது தொடர்பாக சூர்யாவின் நண்பர்கள் வெள்ளலூர் ரோடு கலையரசன் (வயது 19), சிங்காநல்லூர்
கோத்தாரி மேல் தெரு சங்கர் (வயது 21), சிங்காநல்லூர், வெள்ளலூர் ரோடு
திருமுருகன் (வயது 21) ஆகியோரை கைது செய்துள்ளனர். தப்பி ஓடிய சூர்யாவை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags :
ArrestfriendLove
Advertisement
Next Article