தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் #kushboo!
தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியை குஷ்பு திடீரென ராஜினாமா செய்தார்.
2010-ம் ஆண்டு திமுகவில் இருந்த குஷ்பு 2014-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். பின்னர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய குஷ்பு, 2020-ம் ஆண்டு பாஜகவில் இணைந்தார். 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்ட குஷ்பு தோல்வியைத் தழுவினார். பின்னர், பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் பதவி குஷ்புவுக்கு வழங்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, கடந்த 2023-ம் ஆண்டு பிப்ரவரி மாதம், குஷ்பு தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டார். அப்போது பேசிய குஷ்பு, “நான் எப்போதும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்காக குரல் கொடுத்து வருகிறேன். பெண்களின் உரிமைகளுக்கும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறேன். பெண்களின் சுயமரியாதைக்காக தொடர்ந்து போராடி வருகிறேன். பெண்கள் பயமின்றி, தங்களுக்கு நேரும் பாதிப்புகளைக் கூற வேண்டும். உங்களுக்கு குரல் கொடுக்க நான் இருக்கிறேன். எப்போது வேண்டுமானாலும் என்னைத் தொடர்பு கொள்ளலாம்” என தெரிவித்தார்.
இதையும் படியுங்கள் : “பொது பட்ஜெட் போலவே ரயில்வே திட்டங்களிலும் தமிழ்நாட்டிற்கு துரோகம் அரங்கேற்றியுள்ளது” – மதுரை எம்.பி #SuVenkatesan கண்டனம்!
அதேபோல் அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்கி வந்தார். மணிப்பூரில் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக குஷ்பு குரல் கொடுக்கவில்லை என எதிர்க்கட்சிகள் விமர்சித்தன. பட்டியலின மக்களை அவமதிக்கும் வகையில் குஷ்பு பேசியதாகவும் சர்ச்சை எழுந்தது. இந்நிலையில், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியை குஷ்பு திடீரென ராஜினாமா செய்துள்ளார். கடந்த 2023 பிப்ரவரி மாதம் 28-ம் தேதி தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக பொறுப்பேற்ற குஷ்பு, ஒன்றரை ஆண்டுகள் கழித்து தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.