கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டி - பேட்மிண்டன் ஆடவர் இரட்டையர் பிரிவில் தங்கம் வென்ற தமிழ்நாடு வீரர்கள்!
கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள், பேட்மிண்டன் ஆடவர் இரட்டையர் பிரிவில் தமிழ்நாட்டை சேர்ந்த வீரர்கள் தங்கப் பதக்கத்தை சொந்தமாக்கினர்.
மத்திய அரசு திட்டத்தின் கீழ் கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் கடந்த 2018ம்
ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில்
நடத்தப்பட்ட இந்த போட்டியானது, இந்தாண்டு தமிழ்நாட்டில் நடைபெற்று வருகிறது.
கடந்த 19 ஆம் தேதி தொடங்கிய இந்த விளையாட்டு போட்டிகளில் கபடி, ஜூடோ, ஸ்குவாஷ், ஃபென்சிங், பாக்ஷிங், ஜிம்னாஸ்டிக்ஸ், யோகாசனம், ஹாக்கி, மல்லாகம்ப், கட்கா, கால்பந்து, கூடைப்பந்து, தடகளம், துப்பாக்கிச் சுடுதல், வாலிபால், பளுதூக்குதல், கோ கோ, வில்வித்தை, பேட்மிண்டன் உள்ளிட்ட பல பிரிவுகளில் வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.
இதையும் படியுங்கள் ; 2024-25-ம் ஆண்டிற்கான யுனெஸ்கோ உலக பாரம்பரிய பட்டியல்- செஞ்சிக் கோட்டை பரிந்துரை!
இதுவரையில் நடந்த போட்டிகளில் நிலவரப்படி தமிழ்நாடு 29 தங்கம், 34 வெண்கலம் மற்றும் 20 வெள்ளிப் பதக்கம் உள்பட மொத்தமாக 84 பதக்கங்கள் கைப்பற்றி பதக்க பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது. மகாராஷ்டிரா 47 தங்கம், 41 வெள்ளி மற்றும் 45 வெண்கலம் என்று மொத்தமாக 133 பதக்கங்கள் கைப்பற்றி முதல் இடத்திலும், ஹரியானா 34 தங்கம், 21 வெள்ளி மற்றும் 44 வெண்கலம் என 99 பதக்கங்கள் கைப்பற்றி 2ஆவது இடத்திலும், பஞ்சாப் 11 தங்கம், 12 வெள்ளி மற்றும் 13 வெண்கலம் என்று மொத்தமாக 36 பதக்கங்கள் கைப்பற்றி 4ஆவது இடத்திலும் உள்ளன.
இந்நிலையில், இன்று நடைபெற்ற பேட்மிண்டன் போட்டியில் ஆடவர் இரட்டையர் பிரிவில் தமிழ்நாட்டை சேர்ந்த விநாயக்ராம் மற்றும் ஸ்வஸ்திக் இணை சாம்பியன் பட்டம் வென்று தங்கப் பதக்கத்தை சொந்தமாக்கினர். இதன் மூலம் நடப்பு கேலோ இந்தியா போட்டியில் தமிழ்நாடு தனது 30 வது தங்கத்தினை வென்றுள்ளது.