குகேஷ், மனுபாக்கர் உள்ளிட்ட நால்வருக்கு 'கேல் ரத்னா' விருது அறிவிப்பு!
உலக செஸ் சாம்பியன் குகேஷ், துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை மனுபாக்கர் உள்ளிட்ட நால்வருக்கு மத்திய அரசின் 'கேல் ரத்னா' விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு சார்பில், ஆண்டுதோறும் சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் சிறந்து விளங்கும் வீரர், வீராங்கனைகளுக்கு ‘கேல் ரத்னா’ விருது வழங்கி கவுரவிக்கப்படுகிறது. அந்த வகையில், இந்தாண்டிற்கான கேல் ரத்னா விருது பட்டியலை விளையாட்டுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
அதில் உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷுக்கு கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஹாக்கி வீரர் ஹர்மன்பிரீத், துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மனுபாக்கர் ஆகியோருக்கும் கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பாராலிம்பிக்ஸில் பதக்கம் வென்ற பிரவீன் குமாருக்கும் கேல் ரத்னா விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கேல் ரத்னா விருது என்பது இந்தியாவில் விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதாகும். கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியான பரிந்துரை பட்டியலில் குகேஷ் மற்றும் மனுபாக்கர் பெயர்கள் இடம்பெறாத நிலையில், தற்போது அவர்கள் பெயரும் விருது பட்டியலில் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், பாராலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்காக பதக்கம் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த துளசிமதி முருகேசன், நித்யா ஸ்ரீ சுமதி சிவன், மனிஷா ராமதாஸ் உட்பட 32 பேருக்கு அர்ஜுனா விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. விளையாட்டு துறையில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த விருதுகளை குடியரசு தலைவர் திரவுபதி முர்மு ஜனவரி 17 ஆம் தேதி நடைபெறவுள்ள விழாவில் வழங்கவுள்ளார்