#KeralaADMDeath : முன்னாள் மார்க்சிஸ்ட் தலைவர் திவ்யா கைது!
கண்ணூர் கூடுதல் மாவட்ட ஆட்சியர் நவீன் பாபு தற்கொலை வழக்கில், முன்ஜாமின் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்ததைத் தொடர்ந்து, ஆளும் மார்க்சிஸ்ட் கட்சியின் முக்கிய பிரமுகர் திவ்யா கைது செய்யப்பட்டார்.
கண்ணூர் மாவட்டம் செங்கலையில் பெட்ரோல் பங்க் அமைப்பதற்கு ஒப்புதல் அளிக்கக் கோரி, கண்ணூர் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பஞ்சாயத்து தலைவர் திவ்யா விண்ணப்பத்திருந்த நிலையில், அதில் சில குறைபாடுகளைச் சுட்டிக்காட்டி நவீன் பாபு நிறுத்தி வைத்துள்ளார். பின்னர், அரசு தரப்பிலிருந்து அளிக்கப்பட்ட அழுத்தம் காரணமாக அவர் ஒப்புதல் அளித்துள்ளார்.
ஒப்புதல் அளித்த இரு தினங்களில் அவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அவருக்கு வழியனுப்பு விழா கடந்த 14-ஆம் தேதி நடைபெற்றது. அப்போது அழையா விருந்தாளியாக அங்கு வந்த திவ்யா, தனது விண்ணப்பத்துக்கு ஒப்புதல் அளிக்கத் தாமதித்ததுதான் இந்த பணியிட மாறுதலுக்கான காரணம் என்று கூறி கிண்டல் செய்துள்ளார். அடுத்த நாளே, தனது அரசு இல்லத்தில் நவீன் பாபு தூக்கிட்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.
இதனையடுத்து நவீன் பாபுவின் மனைவியும், வட்டாட்சியருமான மஞ்சுஷா அளித்த புகாரின் பேரில், திவ்யா மீது தற்கொலைக்குத் தூண்டியது உள்ளிட்டப் பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து, மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பதவியிலிருந்து திவ்யாவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நீக்கியது. அதைத் தொடர்ந்து, முன்ஜாமின் கோரி மாவட்ட கூடுதல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் திவ்யா மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த தலசேரி மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி கே.டி.நிசார் அகமது, “இந்த வழக்கில், அரசு உயர் அதிகாரியை அவமதிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் முன்கூட்டியே திட்டமிட்டு திவ்யா செயல்பட்டிருப்பது தெளிவாகத் தெரிகிறது” என்று குறிப்பிட்டும், விதிவிலக்கான சந்தர்ப்பங்களில் மட்டுமே முன்ஜாமின் சலுகை அளிக்கப்பட வேண்டும் என்ற உயர்நீதிமன்ற மற்றும் உச்சநீதிமன்ற உத்தரவுகளை மேற்கோள்காட்டியும் திவ்யாவின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
முன்ஜாமின் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்த சில மணி நேரங்களில், கண்ணூர் நகர போலீஸார் திவ்யாவை கைது செய்தனர். நீதிமன்ற உத்தரவை வரவேற்ற மஞ்சுஷா, 'எங்களின் வாழ்வு சீரழிய காரணமான நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பதற்காக, எந்த எல்லைக்கும் செல்லத் தயார்” என தெரிவித்துள்ளார்.