#Kerala | பாலக்காடு இடைத்தேர்தலில் போலி வாக்குகள் குறித்து வி.டி.சதீசன் தெரிவித்தது என்ன?
This news Fact Checked by ‘Newsmeter’
பாலக்காடு இடைத்தேர்தலில் போலி வாக்குகள் பதிவாகியதாக எழுந்த புகாரையடுத்து, எதிர்க்கட்சித் தலைவர் வி.டி.சதீசன், ஐக்கிய முன்னணி வேட்பாளர் ராகுல் மாங்குடிலுக்கு போலி வாக்குகள் சேர்த்ததை ஒப்புக்கொண்டதாக சமூக வலைதளங்களில் வீடியோ பரவி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.
பாலக்காடு இடைத்தேர்தலுக்கான ஏற்பாடுகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், வாக்காளர் பட்டியலில் போலி வாக்குகள் சேர்க்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்த மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டதையடுத்து, யுடிஎப் வேட்பாளருக்கு போலி ஓட்டு போட்டதை எதிர்க்கட்சித் தலைவர் ஒப்புக்கொண்டதாக சமூக வலைதளங்களில் வீடியோ பரவி வருகிறது. மேலும், வி.டி.சதீசனின் ஊடகவியலாளர் சந்திப்பின் காணொளிகளும் சில ஊடக அறிக்கைகளும் வலம் வருகின்றன.
உண்மைச் சரிபார்ப்பு:
இந்த பிரசாரம் தவறானது என்றும், எதிர்க்கட்சித் தலைவரின் செய்தியாளர் சந்திப்பின் சில பகுதிகள் மட்டும் திருத்தப்பட்டு பிரசாரம் செய்யப்பட்டிருப்பதும் விசாரணையில் கண்டறியப்பட்டது.
பரவி வரும் காணொளியை விரிவாக ஆராய்ந்த பிறகு சில விஷயங்கள் தெளிவாகின. முதல் பாகத்தில், பாலக்காடு தொகுதியில் முறைகேடாக வாக்குகள் சேர்த்தது குறித்த செய்தியுடன் எதிர்க்கட்சித் தலைவரின் செய்தியாளர் சந்திப்பு காணொளி, பின்னர், பல்வேறு செய்தி சேனல்கள் போலி அடையாள அட்டை தொடர்பான செய்திகளை ஒளிபரப்பியது கண்டறியப்பட்டது. இந்த இரண்டும் வெவ்வேறு சம்பவங்கள் என்பது சோதனையில் தெரிந்தது.
அப்போது பாலக்காடு இடைத்தேர்தல் தொடர்பாக வாக்காளர் பட்டியலில் யுடிஎப் போலி வாக்குகளை சேர்த்ததை எதிர்க்கட்சித் தலைவர் ஒப்புக்கொள்கிறார் என்ற கூற்று ஆய்வு செய்யப்பட்டது. இதற்காக வி.டி.சதீசனின் பத்திரிக்கையாளர் சந்திப்பின் முழு வீடியோ கண்டறியப்பட்டது. நவம்பர் 15, 2024 அன்று பாலக்காட்டில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு அவரது முகநூல் பக்கத்தில் நேரலை செய்யப்பட்டுள்ளது.
வயநாடு முண்டகை பேரிடரை தேசிய பேரிடராக அறிவிக்காத மத்திய அரசின் முடிவுக்கு எதிராக ஐக்கிய ஜனநாயக முன்னணியின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தவே இந்த செய்தியாளர் சந்திப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதைத்தான் முதல் பாகத்தில் பேசுகிறார். அப்போது போலி வாக்குகள் தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். LDF வேட்பாளரின் வாக்கு தொடர்பாக அவர் சில குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார். வாக்காளர் பட்டியலில் எல்.டி.எப் மற்றும் பாஜக போலி வாக்குகளை சேர்த்துள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் குற்றம் சாட்டினார். பின்னர் UDF-ன் முறையான தேர்தல் நடவடிக்கைகள் குறித்து பேசுகிறார். பூத் அளவில் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட புதிய வாக்குகள் சேர்க்கப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.
செய்தியாளர் சந்திப்பில் வி.டி.சதீசன், “நாங்கள் யாரும் போலி வாக்குகளைச் சேர்க்கவில்லை. இங்கு அதிக வாக்குகளைச் சேர்த்துள்ளோம். ஒவ்வொரு சாவடியிலும் (வாக்காளர் பட்டியல்) இல்லாத வாக்காளர்களின் எண்ணிக்கையை கணக்கிட்டுள்ளோம். 5500 வாக்குகளுக்கு மேல் சேர்த்துள்ளோம். எல்டிஎப், பாஜகவின் ஓட்டுகளை விட 2 மடங்குக்கு மேல் சேர்த்துள்ளோம். நாங்கள் எங்கள் பூத் கமிட்டிகள். அந்தந்த பூத்களின் பட்டியலை எடுத்து அவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க உள்ளோம்" என தெரிவித்துள்ளார்.
இதன்மூலம் வி.டி.சதீசனின் நேரலையில், இடம்பெற்றுள்ள காணொளியின் பகுதிகள் தெளிவாக முழுமையடையாமல் காணப்படுவதுடன், காணொளியில் காணப்பட்ட போலி அடையாள அட்டை தொடர்பான ஊடகச் செய்திகளும் பழையவை என கண்டறியப்பட்டது.
இதன் மூலம், பாலக்காடு இடைத்தேர்தல் பின்னணியில் பரவி வரும் காணொளி, ஓராண்டுக்கு முன், கட்சித் தேர்தல் தொடர்பாக நடந்த சம்பவத்தை குறிக்கிறது என்பது தெளிவாகியுள்ளது.
முடிவு:
பாலக்காடு இடைத்தேர்தலில் UDF போலி வாக்குகளை வாக்காளர் பட்டியலில் சேர்த்ததை எதிர்க்கட்சித் தலைவர் ஒப்புக்கொண்டதாக பரப்பப்படும் வீடியோ தவறானது. முறையான பூத் மட்டப் பணிகள், ஐயாயிரம் வாக்குகளுக்கு மேல் சேர்த்தது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் பேசுகிறார். எல்டிஎப் மற்றும் பாஜக போலி வாக்குகளைச் சேர்த்ததாக அவர் குற்றம் சாட்டினார். செய்தியாளர் சந்திப்பின் முழுமையற்ற காணொளியுடன், ஓராண்டுக்கு முன் நடந்த தேர்தல் தொடர்பாக இளைஞர் காங்கிரஸ் அமைப்பினர் போலி அடையாள அட்டை தயாரித்த வழக்கின் செய்தியை எடிட் செய்து சேர்த்துள்ளனர்.
Note : This story was originally published by ‘Newsmeter’ and translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.