கேரளா துணைவேந்தர் நியமனம் - உச்சநீதிமன்றத்தில் காரசார விவாதம்!
அப்துல் கலாம் பல்கலைக்கழகத்திற்கு தற்காலிக துணைவேந்தரை நியமித்த விவகாரம் தொடர்பான வழக்குகளை உச்சநீதிமன்றம் விசாரித்து வருகிறது. கேரள ஆளுநர் மற்றும் மாநில அரசுக்கு இடையேயான இந்த விவகாரத்தில், இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.
கேரள ஆளுநர், அப்துல் கலாம் பல்கலைக்கழகத்திற்கு தற்காலிக துணைவேந்தரை நியமித்ததை எதிர்த்து கேரள அரசு தொடர்ந்த வழக்கும், ஆளுநரின் உத்தரவை ரத்து செய்த கேரள உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ஆளுநர் தொடர்ந்த வழக்கும் நீதிபதிகள் ஜெ.பி.பர்திவாலா மற்றும் ஆர்.மகாதேவன் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
இந்த விவகாரம் தொடர்பாக இருதரப்பும் பேசி ஒரு முடிவுக்கு வர வேண்டும் என்று ஏற்கனவே உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது. அதன் நிலை என்ன என்று நீதிபதிகள் கேட்டதற்கு, மத்திய அரசு தரப்பு இரண்டு முறை பேச்சுவார்த்தை நடந்ததாகத் தெரிவித்தது. ஆனால், கேரள அரசு தரப்பு எந்தத் தீர்வும் எட்டப்படவில்லை என்று பதிலளித்தது.
இந்த வழக்கில் இடைக்காலமாக ஒரு தற்காலிக துணைவேந்தரை நியமனம் செய்ய மத்திய அரசு பரிந்துரைத்தது. ஆனால், கேரள அரசு தரப்பு, துணைவேந்தரைத் தேர்ந்தெடுப்பதற்கான நடைமுறைகள் ஏற்கனவே தொடங்கிவிட்டன என்றும், அதற்குச் சில கால அவகாசம் தேவைப்படும் என்றும் தெரிவித்தது.
துணை வேந்தரைத் தேர்வு செய்வதற்கான தேடுதல் குழுவை அமைக்கும் அதிகாரம் யாருக்கு உள்ளது என்பது குறித்து இருதரப்புக்கும் இடையே கடுமையான வாதம் நடந்தது. யுஜிசி விதிமுறைப்படி, தேடுதல் குழுவை அமைக்கும் அதிகாரம் கேரள அரசுக்கே உள்ளது.
ஆனால், ஆளுநர் அதனை மீறி தன்னிச்சையாகக் குழுவை அமைத்துள்ளார் என்று வாதிட்டது. யுஜிசி விதிமுறைப்படி, தேடுதல் குழுவை அமைக்கும் அதிகாரம் ஆளுநருக்கே உள்ளது என்று வாதிட்டது. நீதிபதிகள், யுஜிசி விதிமுறைப்படி துணைவேந்தரைத் தேடும் குழுவில் மூன்று அல்லது ஐந்து பேர் இருப்பார்கள் என்று உள்ளது. ஆனால், எந்த விதியில் ஆளுநர்தான் இறுதி முடிவு எடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது? என்று மத்திய அரசு வழக்கறிஞரிடம் நேரடியாகக் கேள்வி எழுப்பினர்.
அதற்கு மத்திய அரசு, பொது அறிவிப்பை வெளியிட்டு தகுதியான நபர்களை அணுகும்போது, அதில் தகுதியானவரை வேந்தரான ஆளுநர் இறுதி செய்வார் என்று பதிலளித்தது. ஆனால், "துணைவேந்தரை ஆளுநர்தான் இறுதி செய்ய வேண்டும் என்று எங்கு, எந்த விதியில் எழுதப்பட்டுள்ளது?" என்று நீதிபதிகள் மீண்டும் கேள்வி எழுப்பியதால், விவாதம் உச்சக்கட்டத்தை அடைந்தது. இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.