கேரள மருத்துவக் கழிவுகள் விவகாரம் - திருநெல்வேலியை சேர்ந்த இருவர் கைது!
கேரள மருத்துவக் கழிவுகள் தமிழ்நாட்டில் கொட்டப்பட்ட விவகாரத்தில் திருநெல்வேலியை சேர்ந்த இருவர் கைதாகியுள்ளனர்.
கேரள மாநிலத்தில் அன்றாடம் சேரும் மருத்துவ மற்றும் இறைச்சிக் கழிவுகள் அந்த மாநில எல்லையை ஒட்டி உள்ள தமிழக மாவட்டங்களில் கொட்டப்படுவது தொடர்கதையாகி வருகிறது. இந்நிலையில் திருநெல்வேலி சீதபற்பநல்லூர் அருகே நடுக்கல்லூர், பழவூர் பகுதியில் கடந்த திங்கள்கிழமையன்று அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலங்களில் கேரளாவின் மருத்துவக் கழிவுகள் மூட்டை மூட்டையாக கொட்டப்பட்டு இருந்தன.
இதற்கு பெரும் கண்டனம் எழுந்த நிலையில் தமிழக-கேரளா எல்லையான புளியரை சோதனை சாவடியில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே கேரள மருத்துவக் கழிவுகள் தமிழ்நாட்டில் கொட்டப்படுவதற்கு தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் கண்டனமும் தெரிவித்தது. மேலும் தமிழ்நாட்டில் கொட்டப்பட்ட மருத்துவ கழிவுகளை அகற்றும் செலவினை கேரள மாசுகட்டுப்பாட்டு வாரியத்திடம் வசூலிக்க தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு உத்தரவிட்டது.
இந்நிலையில் இந்த விவகாரத்தில் தலைமை ஏஜென்டாக செயல்பட்ட, திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லி பகுதியை சேர்ந்த மனோகர் மற்றும் மாயாண்டி ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த தகவலை திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் நியூஸ் 7 தமிழுக்கு தெரிவித்துள்ளார்.