வயநாடு நிலச்சரிவு : உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு அவரவர் மத நம்பிக்கையின் படி இறுதிச்சடங்கு! பெருக்கெடுத்தோடும் கண்ணீர் மழை!
வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் உடல்களை தகனம் செய்ய தற்காலிக மின்மயானம் அமைத்து இறுதிச்சடங்கு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கேரளாவில் பருவமழை தீவிரமடைந்ததையடுத்து, நேற்று முன்தினம் (ஜுலை 29) வயநாட்டில் அடுத்தடுத்து 3 நிலச்சரிவுகள் ஏற்பட்டு, தற்போது வரை கிட்டதட்ட 243க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் உயிரிழப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து இரண்டு நாட்களாக மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுவரை 1000-த்திற்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் 200க்கும் மேற்பட்டோர் காணாமல் போனதாக மீட்கப்பட்டவர்கள் தெரிவித்த நிலையில், தேடுதல் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதையும் படியுங்கள் : பாரிஸ் ஒலிம்பிக் போட்டி: வில்வித்தையில் இந்திய வீராங்கனை தீபிகா குமாரி அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்!
இந்நிலையில், கேரளா மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் உடல்களை மேப்பாடி என்ற பகுதியில் தற்காலிக மின்மயானம் அமைத்து எரியூட்டி வருகின்றனர். உயிரிழந்தவர்களை அவரவர் மதத்தின் சார்பில் இறுதி மரியாதைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
முன்னதாக, ஆம்புலன்ஸ் மூலம் தற்காலிக மின்மயானத்திற்கு எடுத்து செல்லப்பட்டது. அப்போது செல்லும் போது சாலையோரம் இருந்த பொதுமக்கள் பூக்கள் தூவி இறுதி மரியாதை செலுத்தினர். பின்னர், அந்த தற்காலிக மின்மயானத்தில் 100க்கும் மேற்பட்ட உடல்கள் ஒரே இடத்தில் வைத்து எரியூட்டப்பட்டது.