#HemaCommitteeReport | “பாலியல் தொல்லைகள் குறித்து இதுவரை யார் மீதும் புகார் வரவில்லை” - கேரள ஆளுநர்!
திரைத்துறை பாலியல் தொல்லைகள் குறித்து யார் மீதும் புகார் வரவில்லை எனவும், புகார் அளிக்க முன்வந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கான் தெரிவித்துள்ளார்.
மலையாள சினிமாவில் பெண்கள் எதிர்கொண்ட பாலியல் தொல்லைகள் குறித்த நீதிபதி ஹேமா குழுவின் அறிக்கை மிகப்பெரிய அதிர்வுகளை ஏற்படுத்தி வருகிறது. நடிகை ரேவதி சம்பத் என்பவர் நடிகர்கள் சித்திக் மற்றும் ரியாஸ் கான் இருவரும் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றம் சாட்டினார். தொடர்ந்து பெங்காலி நடிகை ஸ்ரீலேகா மித்ரா மலையாள இயக்குநர் ரஞ்சித், சினிமா விவாதத்திற்காகத் தன்னை வீட்டிற்கு அழைத்து பாலியல் தொல்லை கொடுத்தார் என கூறியுள்ளார்.
இந்தக் குற்றச்சாட்டுகள் கேரளத்தில் அதிர்வைக் கிளப்ப, நடிகர் சித்திக் மலையாள நடிகர்கள் சங்கத்தின் (அம்மா) பொதுச்செயலாளர் பதவியையும், இயக்குநர் ரஞ்சித் கலாச்சித்ரா அகாதெமியின் தலைவர் பொறுப்பிலிருந்தும் ராஜிநாமா செய்தனர். தொடர்ந்து மேலும் பல நடிகைகள் தங்களுக்கு நிகழ்ந்த பாதிப்புகளைக் குறித்து பேச முன்வந்தால் பல நடிகர்கள் சிக்குவார்கள் என்றே தெரிகிறது.
இது தொடர்பாக அம்மாநில ஆளுநர் ஆரிஃப் முகமது கான் கூறுகையில், “கேரள திரைத்துறை பாலியல் தொல்லைகள் தொடர்பாக இதுவரை யார் மீதும் புகார் வரவில்லை. பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்க முன்வந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் பினராயி விஜயன் ஏற்கெனவே அறிவித்துள்ளார். அதன்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என தெரிவித்துள்ளார்.