கேரளா - ஆலத்தூர் மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்றதையடுத்து தேவஸ்வம் போர்டு அமைச்சர் ராதாகிருஷ்ணன் ராஜிநாமா!
ஆலத்தூர் மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்றதையடுத்து அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்தார் ராதாகிருஷ்ணன்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவரும், சமீபத்தில் கேரளத்தில் ஒரேயொரு தொகுதியில் இடதுசாரி ஜனநாயக முன்னணி சார்பில் வெற்றிபெற்றவருமான கே.ராதாகிருஷ்ணன் தனது அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்வதாக செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார். ஆலத்தூர் மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்றதையடுத்து, கேரள தேவஸ்வம் போர்டு, எஸ்சி, எஸ்டி, பிற்படுத்தப்பட்டோர் நலன் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்த அவர், இம்மாத இறுதியில் புதுதில்லி செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன் ராஜிநாமா கடிதத்தை முதல்வர் பினராயி விஜயனிடம் அவரது அதிகாரபூர்வ இல்லத்தில் அளித்தார்.
ராஜிநாமா கடிதத்தை அளித்த பின்னர் இதுகுறித்து பேசிய ராதாகிருஷ்ணன், மிகுந்த திருப்தியுடன் பதவி விலகுகிறேன். அமைச்சர் என்ற முறையில் மக்களுக்கு அதிகபட்ச சேவையை செய்ய முயற்சித்தேன்” என்றார். ராதாகிருஷ்ணன் ராஜிநாமா செய்வதற்கு முன்னதாக, பழங்குடியினரின் குடும்ப குடியேற்றங்களை விவரிக்க 'காலனி', 'சங்கேதம்' மற்றும் 'ஊர்' ஆகிய வார்த்தைகளைப் பயன்படுத்தக் கூடாது என்று ஒரு குறிப்பிடத்தக்க உத்தரவைப் பிறப்பித்து இருந்தார். அதற்கு பதிலாக, அத்தகைய பகுதிகளை விவரிக்க 'நகர்', 'உன்னதி' மற்றும் 'பிரகிருதி' போன்ற சொற்களைப் பயன்படுத்தவும் அவர் பரிந்துரைத்திருந்தார்.
'காலனி' என்ற வார்த்தை காலனித்துவ அடிமைத்தனத்தின் அடையாளம். எனவே, இந்த பயன்பாட்டை ஒழிக்க வேண்டும் என்றும் ராதாகிருஷ்ணன் கூறினார். ஆலந்தூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட ராதாகிருஷ்ணன் 20,111 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது.