கேரள குண்டுவெடிப்பு: குற்றவாளியை அடையாளம் காண அணிவகுப்பு!
கேரள மாநிலம், களமசேரி குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட டொமினிக் மார்ட்டினை அடையாளம் காண்பதற்கான அணிவகுப்பு நடைபெற்றது.
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் களமச்சேரி பகுதியில் உள்ள ஜம்ரா என்ற சர்வதேச மாநாட்டு மையத்தில் யெகோவாவின் சாட்சிகள் என்ற கிறிஸ்தவ சபையினரின் பிரார்த்தனை கூட்டத்தில் கடந்த 29-ந்தேதி குண்டுகள் வெடித்தன.
இந்த குண்டுவெடிப்பில் இரிங்கோல் பகுதியை சேர்ந்த லியோனா பவுலோஸ் (45), இடுக்கி மாவட்டம் தொடுபுழா பகுதியை சேர்ந்த குமாரி (53), லிபினா என்ற 12 வயது சிறுமி ஆகிய 3 பேர் பலியாகினர். இந்த சம்பவம் கேரள மாநிலம் முழுவதும் பதட்டத்தை ஏற்படுத்தியது.
இந்தநிலையில் குண்டுவெடிப்பு நடந்த சிறிது நேரத்திலேயே குண்டுவெடிப்பை நிகழ்த்தியதாக கொச்சியை சேர்ந்த டொமினிக் மார்ட்டின் என்பவர் சமூக வலைதளங்களில் வீடியோவை வெளியிட்டார். மேலும் அவர் கொடகரா போலீஸ் நிலையத்தில் சரணடைந்தார்.
இந்நிலையில், கேரள மாநிலம், களமசேரி குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட டொமினிக் மார்ட்டினை அடையாளம் காண்பதற்கான அணிவகுப்பு நடைபெற்றது. குண்டுவெடிப்பு நடைபெற்ற ஜெபக்கூட்டத்தில் பங்கேற்ற 3 பேர் இதில் பங்கேற்றனர்.
எர்ணாகுளம் ஜூடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்ற நீதிபதி காக்கநாடு மாவட்ட சிறைக்கு வந்த போது அவருடைய முன்னிலையில் இந்த அடையாள அணிவகுப்பு நடைபெற்றது. சம்பவத்தன்று டொமினிக் மார்ட்டினைப் பார்த்ததாக போலீஸாருக்கு சிலர் தகவல்
தெரிவித்ததன் அடிப்படையில் 20 நிமிடங்களுக்கு அடையாள அணிவகுப்பு நடைபெற்றது.