கேரள குண்டுவெடிப்பு: கைது செய்யப்பட்ட டொமினிக் மார்ட்டினுக்கு 10 நாட்கள் போலீஸ் காவல்!
கேரள மாநிலம், களமசேரி குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட டொமினிக் மார்ட்டினை, 10 நாள்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க கேரள நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் களமச்சேரி பகுதியில் உள்ள ஜம்ரா என்ற சர்வதேச மாநாட்டு மையத்தில் யெகோவாவின் சாட்சிகள் என்ற கிறிஸ்தவ சபையினரின் பிரார்த்தனை கூட்டத்தில் கடந்த 29-ந்தேதி குண்டுகள் வெடித்தன. இந்த குண்டுவெடிப்பில் இரிங்கோல் பகுதியை சேர்ந்த லியோனா பவுலோஸ் (45), இடுக்கி மாவட்டம் தொடுபுழா பகுதியை சேர்ந்த குமாரி (53), லிபினா என்ற 12 வயது சிறுமி ஆகிய 3 பேர் பலியாகினர்.
இந்த சம்பவம் கேரள மாநிலம் முழுவதும் பதட்டத்தை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து குண்டுவெடிப்பு நடந்த சிறிது நேரத்திலேயே குண்டுவெடிப்பை நிகழ்த்தியதாக கொச்சியை சேர்ந்த டொமினிக் மார்ட்டின் என்பவர் சமூக வலைதளங்களில் வீடியோவை வெளியிட்டார். மேலும் அவர் கொடகரா போலீஸ் நிலையத்தில் சரணடைந்தார். இதனையடுத்து அக்டோபர் 31-ம் தேதி அவர் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார்.
இதனையடுத்து மார்ட்டினை 10 நாள்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து நீதிபதி உத்தரவிட்டார். இதற்கிடையில், தனக்குத் தானே ஆஜராகி வாதாடிக் கொள்வதாக கூறியுள்ள டொமினிக் மார்ட்டின், வழக்கறிஞரின் சட்ட உதவியை இன்று மீண்டும் மறுத்தார்.