அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு... உச்சநீதிமன்றத்தில் கெஜ்ரிவால் மேல்முறையீடு!
டெல்லி மதுபான கொள்கை வழக்கில் உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மேல்முறையீடு செய்துள்ளார்.
மதுபான கொள்கை வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மார்ச் 21ம் தேதி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார். அதன் பின் அவரது காவல் ஏப்ரல் 15 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்ட நிலையில் இப்போது டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் கெஜ்ரிவால் தரப்பிலிருந்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் தேர்தல் நடைபெறும் சமயத்தில் அமலாக்கத் துறையினர் கைது செய்தது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு முன்னதாக விசாரணைக்கு வந்த நிலையில் ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நேற்று (ஏப்ரல் 9ம்) பிற்பகல் 2:30 மணிக்கு இவ்வழக்கு மீண்டும் நீதிபதி ஸ்வா்ண கந்த ஷர்மா தலைமையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் தான் கைது செய்யப்பட்டது சட்டவிரோதம் என அறிவிக்கக் கோரிய டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மனுவை தள்ளுபடி செய்து டெல்லி உயர்நீதிமன்ற தீர்ப்பளித்தது.
இந்நிலையில், இந்த தீர்ப்பை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் இன்று மேல்முறையீடு மனு செய்யப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என என எதிர்பார்க்கப்படுகிறது.