“கெஜ்ரிவால் சிறையில் மெதுவாக கொல்லப்படுகிறார்” - ஆம் ஆத்மி குற்றச்சாட்டு!
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக பெரிய சதி செய்யப்படுவதாகவும், அவர் மெதுவாக சிறையில் கொல்லப்படுகிறார் எனவும் ஆம் ஆத்மியின் முக்கிய தலைவரும், டெல்லி அமைச்சருமான சவுரப் பரத்வாஜ் தெரிவித்துள்ளார்.
டெல்லி அரசின் மதுபானக் கொள்கை தொடர்பான வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மாதம் கைது செய்யப்பட்டார். அவர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதால், தனது குடும்ப டாக்டருடன் வீடியோ கான்பரன்சிங் வாயிலாக கலந்துரையாட அனுமதிக்கும்படி டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நேற்று முன்தினம் (ஏப். 18) விசாரணைக்கு வந்தது.
இந்த விசாரணையின் போது, ஜாமீன் பெறுவதற்காக கெஜ்ரிவால் வேண்டுமென்றே சர்க்கரையை அதிகம் உண்பதாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியது. இதற்கு கெஜ்ரிவால் தரப்பு மறுப்பு தெரிவித்தது. தொடர்ந்து, நேற்று (ஏப். 19) மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை சிறப்பு நீதிமன்ற நீதிபதி காவேரி பவேஜா விசாரித்தார்.
அமலாக்கத் துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சோயிப் ஹுசைன், “அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பரிந்துரைக்கப்பட்ட உணவு பட்டியலில் பழமோ, இனிப்போ இல்லை. இந்த விவகாரத்தில் எய்ம்ஸ் மருத்துவர்கள் அடங்கிய நிபுணர் குழு முடிவு எடுக்கட்டும்” என வாதிட்டார்.
தொடர்ந்து ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் நேற்று செய்தியாளர்களிடம், “பாஜகவின் நடவடிக்கை ஒருவரை கொல்லும் நிலைக்குக்கூட தள்ளப்படலாம். எனவே சிறையில் கெஜ்ரிவாலுக்கு எதுவும் நடக்கலாம். அவருக்கு எதிராக கடுமையான சதி உள்ளது. ஆனாலும் இந்த நடவடிக்கைகளால் கெஜ்ரிவால் உடைந்து போகவோ, தலை வணங்கவோ மாட்டார்” என தெரிவித்தார்.
அவர்கள் முதலமைச்சருக்கு எதிராக பெரிய சதி செய்கிறார்கள் என்று நான் நம்புகிறேன். அவர் மெதுவாக சிறையில் கொல்லப்படுகிறார். முதலமைச்சரின் உடல்நிலை குறித்து பாஜகவினர் தினமும் பொய்யான அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றனர்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.