ஓய்வை அறிவித்தார் கேதார் ஜாதவ்!
கிரிக்கெட்டின் அனைத்துவடிவ போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார் இந்திய கிரிக்கெட் வீரர் கேதார் ஜாதவ்.
இலங்கைக்கு எதிராக 2014 ஆம் ஆண்டு அறிமுகமானவர் கேதார் ஜாதவ். இந்திய அணிக்காக 73 ஒருநாள் போட்டிகள், 9 டி20 போட்டிகள் விளையாடியுள்ள ஜாதவ் 1,389 மற்றும் 122 ரன்களை எடுத்துள்ளார். ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய நான்கு அணிகளில் விளையாடியுள்ளார்.
ஐபிஎல் தொடரில் மொத்தம் 95 போட்டிகளில் 81 இன்னிங்ஸ்களில் விளையாடி 4 அரை சதங்கள் உட்பட 1,208 ரன்கள் எடுத்துள்ளார். ஐபிஎல் தொடரில் ஆர்சிபி சார்பில் மும்பை அணிக்கு எதிராக வான்கடே மைதானத்தில் ஆடிய போட்டி கடைசி போட்டியாக அமைந்தது. அந்த போட்டியில் அவர் 10 பந்துகளில் 12 ரன்கள் எடுத்தார். இந்நிலையில் அனைத்து வகை கிரிக்கெட்டிலிருந்தும் தனது ஓய்வை அறிவித்துள்ளார் கேதார் ஜாதவ்.
இதுகுறித்து தனது இன்ஸ்டா பக்கத்தில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:
“1,500 மணிநேர இந்த நீண்ட வாழ்க்கையில் உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் அனைவருக்கும் நன்றி. இதன் வாயிலாக நான் அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெற்றதாக கருதப்பட வேண்டும்” என தெரிவித்துள்ளார்.