கவிதா ஜாமீன் மனு - சிபிஐ, அமலாக்கத்துறை பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!
டெல்லி மதுபான கொள்கை முறைகேட்டில் கைதான கவிதாவின் ஜாமீன் மனு மீது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக சட்டவிரோத பண பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக, முன்னாள் தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவின் மகளும், பிஆர்எஸ் தலைவருமான கவிதா கடந்த மார்ச் மாதம் 15 ஆம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து கடந்த ஏப்ரல் 11-ம் தேதி ஊழல் வழக்கில் சிபிஐ கவிதாவை கைது செய்தது. தற்போது அவர் நீதிமன்ற காவலில் இருந்து வருகிறார்.
இந்த சூழலில் தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் கவிதா மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார். இதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். தொடர்ந்து அவர் டெல்லி உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
இந்த மனு நீதிபதிகள் பி.ஆர் கவை மற்றும் கே.வி. விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, கவிதாவின் ஜாமீன் மனு மீது அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ தரப்பில் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் நீதிபதிகள் இந்த வழக்கின் விசாரணையை ஆக.20-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.