#TrainAccident | மழை எதிரொலியாக மீட்பு பணிகளில் தொய்வு!
ரயில் விபத்து நடைபெற்ற கவரப்பேட்டை பகுதியில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதால் மீட்பு பணிகள் தொய்வு ஏற்பட்டுள்ளது.
திருவள்ளூர் அருகே கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் கவரப்பேட்டை அருகே வெள்ளிக்கிழமை இரவு நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது பாக்மதி விரைவு ரயில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் சுமார் 13 பெட்டிகள் வரை தடம்புரண்டது. 19 பேர் காயமடைந்தனர். மீட்பு பணியில் திருவள்ளூர் மாவட்ட அரசு அதிகாரிகள், ரயில்வே ஊழியர்கள், பேரிடர் மீட்பு குழுவினர், காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து பிஹார் மாநிலம் தர்பங்காவுக்கு வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு பாக்மதி அதிவிரைவு ரயில் புறப்பட்டது. இந்த ரயில் ஜோலார்பேட்டை, அரக்கோணம், பெரம்பூர் வழியாக கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் வெள்ளிக்கிழமை இரவு சென்று கொண்டிருந்தது.
வெள்ளிக்கிழமை இரவு 8.27 மணி அளவில் திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை ரயில் நிலையம் அருகே மணிக்கு 75 கி.மீ. வேகத்தில் இந்த ரயில் சென்றபோது, அங்கு ஏற்கெனவே நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது திடீரென மோதியது. இதில் 13 பெட்டிகள் வரை தடம்புரண்டதாக தெரிகிறது. இந்த விபத்தில், உயிரிழப்பு ஏற்படவில்லை என்றும், சுமார் 19 பயணிகள் படுகாயமடைந்ததாக தெரியவந்துள்ளது.
விபத்து குறித்து ரயில்வே கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் பேரில் ரயில்வே அதிகாரிகள், திருவள்ளூர் மாவட்ட அரசு அதிகாரிகள், ரயில்வே போலீஸார், ஆர்.பி,எஃப். போலீஸார் அங்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். தடம்புரண்ட பெட்டிகளில் இருந்து காயமடைந்த பயணிகளை மீட்டு, பொன்னேரி, கும்மிடிப்பூண்டி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். சிலர் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனர்.
விபத்து நடைபெற்ற இடத்துக்கு அமைச்சர் நாசர், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் மற்றும் அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். ஆம்புலன்ஸ் உள்ளிட்ட மருத்துவ குழுவும் அங்கு தயாராக இருந்தது.
மோப்ப நாய்களை கொண்டு தடம்புரண்ட ரயில்களில் யாரேனும் சிக்கி இருக்கிறார்கள் என தேடுதல் பணி நடைபெற்றது. விபத்து நடைபெற்ற இடத்துக்கு அக்கம்பக்கத்தில் உள்ள ஊர் மக்கள் பயணிகளுக்கு தண்ணீர், பிஸ்கட் பாக்கெட் போன்றவற்றை வழங்கி இருந்தனர். விபத்து குறித்து உயர்மட்ட விசாரணை மேற்கொள்ளப்படும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இந்நிலையில், ரயில் விபத்து நடைபெற்ற கவரப்பேட்டை பகுதியில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதால் மீட்பு பணிகள் தொய்வு ஏற்பட்டுள்ளது.