#Kavaraipettai ரயில் விபத்துக்கு காரணம் என்ன?... விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்!
கவரப்பேட்டையில் ஏற்பட்ட ரயில் விபத்துக்கு நட்டு, போல்ட் கழற்றப்பட்டதே காரணம் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
கடந்த அக்.11ஆம் தேதி, திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ரயில் மார்க்கத்தில், கவரப்பேட்டை ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது, பயணிகள் ரயில் மோதி விபத்து ஏற்பட்டது. கர்நாடகா மாநிலம் மைசூருரிலிருந்து காலை 10.30 மணிக்கு புறப்பட்டு சென்னை பெரம்பூர் வழியே தர்பங்கா நோக்கிச் சென்ற பாக்மதி அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயில் விபத்தில் சிக்கியது.
இதில் இரண்டு ரயில் பெட்டிகள் தீப்பற்றி எரிந்தன. விபத்தில் 12 முதல் 13 பெட்டிகள் வரை தடம் புரண்டன. நல்வாய்ப்பாக உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை. இதனால் 4 தண்டவாளங்கள் சேதமடைந்தன. இந்த விபத்து குறித்து விசாரணை நடத்த உயர்மட்ட விசாரணை குழு அமைக்கப்பட்டது. தொடர்ந்து இந்த விபத்து குறித்த விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இந்த விபத்துக்கு தொழில்நுட்ப கோளாறு காரணமில்லை எனவும், நட்டு போல்டுகள் கழட்டப்பட்டதே விபத்துக்கு காரணம் எனவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
கவரப்பேட்டை லூப் லைனில், தண்டவாளத்தை ட்ராக் மாற்றும் இடத்தில் உள்ள நட்டு, போட்ல்டுகள் கழட்டப்பட்டுள்ளதால், இரண்டு ட்ராக்குகள் மாற்றுவது மாறியுள்ளது. இதனால் தடம் மாறி சென்று விபத்து ஏற்பட்டது ரயில்வே போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இவ்விபத்து குறித்து பாக்மதி விரைவு ரயிலின் லோகோ பைலட், துணை லோகோ பைலட், ரயில் பாதுகாவலர் (கார்டு), பயணச்சீட்டு பரிசோதகர், ஏசி பெட்டி பணியாளர்கள் மற்றும் பேன்ட்ரி அலுவலர்கள், பொன்னேரி மற்றும் கவரைப்பேட்டை ரயில் நிலைய அதிகாரிகள், பொன்னேரி மற்றும் விபத்து நடந்த பகுதியின் சிக்னல் பொறுப்பு அலுவலர் உள்ளிட்ட 13 பிரிவுகளைச் சேர்ந்த 30 ரயில்வே அலுவலர்கள் விசாரணைக்கு ஆஜராகுமாறு தெற்கு ரயில்வே பாதுகாப்புத் துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டது.
சென்னை சென்ட்ரலில் உள்ள சென்னை ரயில்வே கோட்ட தலைமை அலுவலகத்தில் தென்மண்டல ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.சௌத்ரி தலைமையில் புதன்கிழமை விசாரணை நடந்தது. முதல்கட்டமாக 15 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது.