#Chennai அருகே ரயில் விபத்து | நாசவேலை காரணமா? போலீசார் தீவிர விசாரணை!
கவரப்பேட்டையில் ரயில் விபத்துக்கு நாசவேலை காரணமா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியை அடுத்துள்ள கவரப்பேட்டை ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது, மைசூரில் இருந்து பீகார் மாநிலம் தர்பங்காவுக்கு சென்று கொண்டிருந்த மைசூர் – தர்பங்கா விரைவு ரயில் மோதியது. நேற்று இரவு சுமார் 8.30 மணியளவில் நடந்த இந்த விபத்தில் 12 முதல் 13 பெட்டிகள் தடம்புரண்டன. மேலும் இரண்டு பெட்டிகள் தீப்பிடித்து எரிந்ததுடன், சில பெட்டிகள் மற்ற தண்டவாளங்களை ஆக்கிரமித்துள்ளன.
இந்த ரயில் விபத்து தகவல் அறிந்த தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்புப் படையினரும் விபத்து நேரிட்ட இடத்திற்கு வந்தடைந்தனர். இந்த விபத்தில் காயமடைந்த பயணிகள் மீட்கப்பட்டு, மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மற்ற பயணிகள் மாற்று ரயிலில் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
நேற்று இரவு முதல் தற்போது வரை முழுவீச்சில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. கவரப்பேட்டையில் தற்போது மழைபெய்து வரும்நிலையில், மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே, ரயில் விபத்து குறித்து முழுமையான விசாரணை நடத்த, தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தலைமையில் உயர்மட்ட விசாரணைக் குழு அமைக்கப்பட உள்ளது.
இந்த குழுவினர் விபத்து நடந்த இடத்தில் ஆய்வு செய்து, ரயிலை இயக்குதல், சிக்னல், தொழில்நுட்ப கோளாறுக்கான காரணங்களை ஆராய்ந்து அதன் அறிக்கையை சமர்பிப்பர். இந்த விபத்துக்கு மனிதத் தவறா அல்லது தொழில்நுட்ப கோளாறுகள் காரணமா என ஆய்வு செய்யப்பட்டு, அதன்படி உயர்மட்டக் குழுவினர் துறைரீதியான நடவடிக்கை மேற்கொள்வர்.
விபத்து நிகழ்ந்த இடத்தில் தண்டவாளங்களின் இணைப்பு துண்டிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே இந்த விபத்துக்கு ஏதேனும் நாசவேலை காரணமாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர். இந்த கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சீரமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், பொக்லைன் இயந்திரங்கள் மூலம் தண்டவாளத்தில் உள்ள பெட்டியை கீழே தள்ளுவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றனர். சீரமைப்பு பணிகளில் சுமார் 350 பேர் ஈடுபட்டு வருகின்றனர். இன்று மாலைக்குள் மீட்புப்பணிகள் நிறைவடைந்து ரெயில் போக்குவரத்து சீரடையும் என எதிர்பார்க்கப்படுகிறது .