"கச்சத்தீவு விவகாரம் குறித்து அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்படவில்லை" - இலங்கை அமைச்சர் பேட்டி!
கச்சத்தீவு விவகாரம் குறித்து இலங்கை அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்படவில்லை என அந்நாட்டின் தகவல் துறை அமைச்சர் பண்டுலா குணவர்த்தன தெரிவித்தார்.
இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்த கச்சத்தீவு 50 ஆண்டுகளுக்கு முன் காங்கிரஸ் ஆட்சியின் போது, ஒப்பந்தம் போடப்பட்டு இலங்கைக்கு வழங்கப்பட்டது. இந்திரா காந்தி பிரதமராக இருந்த போது 1974-ஆம் ஆண்டு இருநாடுகளுக்கு இடையேயான ஒப்பந்தத்தில் இலங்கைக்கு கச்சத்தீவு இந்தியாவால் வழங்கப்பட்டதா என்பது குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்(ஆர்டிஐ) கீழ் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்நிலையில், மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கச்சத்தீவு விவகாரத்தை பாஜக கையிலெடுத்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி, பிறர் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல் கச்சத்தீவை காங்கிரஸ் தாரைவார்த்துவிட்டதாக குற்றஞ்சாட்டினார். இந்நிலையில், பிரதமர் மோடியின் x தளத்தில் பதிவிற்கு காங்கிரஸ் கட்சியினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படியுங்கள் : திருவண்ணாமலையில் நடந்தே சென்று வாக்கு சேகரித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
இந்த பரபரப்பான சூழலில், இலங்கை அமைச்சரவை கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. அமைச்சரவை செய்தித் தொடர்பாளரும், தகவல் துறை அமைச்சருமான பண்டுலா குணவர்த்தன நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவரிடம் கச்சத்தீவு விவகாரம் இந்திய நாடாளுமன்ற தேர்தலில் பேசுபொருளானது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, ‘ இலங்கை அமைச்சரவைக் கூட்டத்தில் கச்சத்தீவு பற்றி எதுவும் விவாதிக்கப்படவில்லை' என்று பதிலளித்தார்.