கச்சத்தீவு மீட்பு : நாளை சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வருகிறார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்!
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இலங்கை அரசிடம் உள்ள கச்சத்தீவை மீட்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொள்ள வலியுறுத்தி, நாளை பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வருகிறார்.
இலங்கை கடற்படையால் தமிழ்நாடு மீனவர்களுக்கு ஏற்படும் இன்னல்களைப் போக்கிட இதுவே நிரந்தரத் தீர்வாக அமையும் எனத் தெரிவித்துள்ளார். இந்தியா, இலங்கை இடையான 1974 மற்றும் 1976ம் ஆண்டு ஒப்பந்தப்படி கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டது. கச்சத்தீவை மீட்கக்கோரிய பல வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.
மேலும் கச்சத்தீவை இலங்கைக்கு வழங்கியது யார் என்ற விவாதம் கடந்த சில ஆண்டுகளாகவே இந்தியாவில் நடந்து வருகிறது. ஆனால் கச்சதீவு குறித்து தங்களிடம் யாரும் பேசவில்லை என இலங்கை முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் அலி சப்ரி கடந்தாண்டு தெரிவித்தார். சமீபத்தில் இந்தியா வந்த இலங்கை அதிபர் இரு நாடுகளுக்கு இடையேயான மீனவர் பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என தெரிவித்தார். ஆனால் தமிழ்நாடு மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்துதான் வருகிறது.