காஷ்மீர் துப்பாக்கிச் சூடு: அமித்ஷாவிடம் நிலைமை குறித்து கேட்டறிந்த ராகுல் காந்தி!
காஷ்மீரின் முக்கிய சுற்றுலாத் தலமான பஹல்காம் என்ற இடத்தில் நேற்று பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் வெளிநாட்டவர் இருவர் உட்பட 26 பேர் உயிரிழந்தனர். மேலும் காயமடைந்த 13 பேரில் 5 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் இந்தியா முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானை தளமாகக் கொண்ட தடைசெய்யப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா (LeT) பயங்கரவாதக் குழுவின் நிழல் குழுவான ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட், இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுள்ளது. ஆனால் அதை அரசு இன்னும் உறுதிப்படுத்தவில்லை.
தீவிரவாதிகளின் இந்த தாக்குதலுக்கு பிரதமர் மோடி, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உட்பட அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ரஷ்யா அதிபர் விளாடிமிர் புடின் மற்றும் இத்தாலிய பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி உள்ளிட்ட உலக தலைவர்களும் இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இந்த தாக்குதல் தொடர்பாக ஜம்மு காஷ்மீரில் முகாமிட்டுள்ள உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் நிலைமை குறித்து கேட்டறிந்ததாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது;
“உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் ஓமர் அப்துல்லா, ஜம்மு காஷ்மீர் காங்கிரஸ் தலைவர் தாரிக் கர்ரா ஆகியோரிடம் பஹல்காம் சம்பவம் குறித்து பேசினேன். தற்போதைய நிலைமை குறித்து கேட்டறிந்தேன்.
பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு நீதி மற்றும் நமது முழு ஆதரவு தேவை” எனக் குறிப்பிட்டுள்ளார்.