அட்டாரி - வாகா எல்லை மூடல்: இரு நாடுகளிலும் உறவுகளை பிரிந்து தவிக்கும் மக்கள்!
காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் பகிர்ந்து வந்த அட்டாரி - வாகா எல்லையை மூட இருநாடுகளும் உத்தரவு பிறப்பித்தது. இரு நாடுகளின் இந்த உத்தரவால் எல்லையை கடக்க முடியாமல் ஏராளமான மக்கள் தவித்து வருகின்றனர்.
நேற்று 191 பாகிஸ்தானிய பிரஜைகள் இந்தியாவில் இருந்து வீடு திரும்பினர். அதே நேரத்தில் 287 இந்திய குடிமக்கள் பாகிஸ்தானிலிருந்து இந்தியா திரும்பினர். இருப்பினும் நீண்ட நாள் விசா வைத்திருப்பவர்களுக்கு எல்லைக் கடக்க அனுமதி மறுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சீக்கிய குடும்பங்கள் உட்பட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வெளிநாட்டினரும் இந்திய குடியேற்ற மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளால் எல்லைப் பகுதியில் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
எல்லை கடக்க அனுமதி மறுக்கப்பட்டவர்களில் 18 இந்தியப் பெண்களும், அவர்களின் குடும்பங்களும் அடங்குவர். இதில் பெரும்பாலானோர் பாகிஸ்தானியர்களை திருமணம் செய்து கொண்டவர்கள். பாகிஸ்தானுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டதை அடுத்து, இந்தப் பெண்கள் இந்திய எல்லைப் பகுதியில் போராட்டம் நடத்தினர்.
ராஜஸ்தானின் ஜோத்பூரிலிருந்து இந்திய எல்லையை அடைய 900 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரம் பயணித்த அப்ஷான் ஜஹாங்கிர் என்ற பெண், “எப்படியாவது, இன்று என் குழந்தைகளை அடைய வேண்டும். என் கணவரும், இரண்டு குழந்தைகளும் பாகிஸ்தானில் உள்ளனர். திருமணமான பெண்களுக்கு என அதிகாரப்பூர்வ நெறிமுறைகள் இருந்தால், அது ஏன் பின்பற்றப்படவில்லை?” என கேள்வி எழுப்பினார்.
தனது பெற்றோரைப் பார்க்கவும், மருத்துவ சிகிச்சை பெறவும் 45 நாள் விசாவில் இந்தியா வந்ததாக அஃப்ஷான் கூறினார். அவர் மார்ச் 27 ஆம் தேதி பாகிஸ்தான் திரும்ப திட்டமிட்டிருந்த நிலையில், இரு நாடுகளுக்கிடையே அதிகரித்து வரும் பதட்டங்கள் காரணமாக, முன்னரே செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதனை அங்குள்ள பாதுகாப்பு அதிகாரிகளிடம் விளக்கிய நிலையில், “இது எங்கள் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது” என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் தனது பயணத்திற்காக ரூ.1 லட்சம் முதல் ரூ.1.50 ஆயிரம் வரை செலவு செய்துள்ளார் அஃப்ஷான். “ஒரு தாயை தனது குழந்தைகளிடமிருந்து பிரிக்கும் சட்டம் ஏதேனும் உள்ளதா?. எல்லை தாண்டி திருமணம் செய்வதைத் தவிர வேறு என்ன குற்றம் செய்தோம்?. பயங்கரவாதிகளைத் தண்டியுங்கள், ஆனால் சாதாரண குடும்பங்கள் ஏன் கஷ்டப்பட வேண்டும்?” என பல கேள்விகளையும் பாதுகாப்பு அதிகாரிகளிடம் முன்வைத்தார்.
இதேபோல், கனடாவைச் சேர்ந்த இந்திய வம்சாவளி சீக்கிய குடும்பத்திற்கும் இந்தியாவுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டு, திரும்ப அனுப்பப்பட்டுள்ளனர். வாகா எல்லை வழியாகச் செல்வதற்குப் பதிலாக விமானம் மூலம் துபாய் வழியாக இந்தியாவிற்கு வருமாறு இந்திய அதிகாரிகள் அவர்களுக்கு அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.
இதுபோல பல்வேறு காரணங்களினால் இந்தியா வரவிருந்த பாகிஸ்தானியர்களும், பாகிஸ்தான் செல்லவிருந்த இந்தியர்களும் எல்லையைக் கடக்க முடியாத சூழலில் தவித்து வருகின்றனர். இவர்களைப் போல், எல்லைகளைக் கடந்து இருநாடுகளிலும் உறவினர்களைக் கொண்டுள்ள ஏராளமான மக்கள் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையில் நிலவும் போர்ப் பதற்றத்தினால் கடுமையான அவதிக்குள்ளாகியுள்ளனர்.
இருநாடுகளுக்கும் இடையில் எப்போதெல்லாம் பதற்றமான சூழல் நிலவுகிறதோ, அப்போதெல்லாம் மனித தொடர்புகள்தான் முதலில் பாதிக்கப்படுவதாகவும், அட்டாரி வாகா எல்லை மூடப்பட்டதன் மூலம் ஏராளமான குடும்பத்தினர் தங்களது உறவுகளைப் பிரியும் சூழல் உருவாகியுள்ளதாகவும் பாகிஸ்தானைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஆசிஃப் மெமூத் குறிப்பிட்டுள்ளார்.