கரூர் துயரம் : உண்மையான விசாரணை நடந்தால் மட்டுமே பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி - NCSC தலைவர் கிஷோர் மக்குவானா..!
கடந்த 27 ஆம் தேதி கரூர் வேலுச்சாமிபுரம் பகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொண்டார். இந்த பிரச்சாரத்தின் போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 நபர்கள் உயிரிழந்தனர். மேலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர்.
இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக வேலுச்சாமிபுரம் பகுதியில் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவர் கிஷோர் மக்குவானா மற்றும் இயக்குனர் ரவிவர்மா விசாரணை அதிகாரி லிஸ்டர் உள்ளிட்டோர் நேரில் ஆய்வு செய்தனர். மேலும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினர் இந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜோஸ் தங்கையா உடன் உள்ளனர்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கிஷோர் மக்குவானா,
”கரூரில் நடந்த கூட்ட நெரிசல் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு என்னுடைய இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன். பாதிக்கப்பட்டவர்கள் என்னுடைய குடும்பம். அதனால் அவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தேன். உண்மையான கூட்ட நெரிசலாக மட்டும் இருந்தால் இவ்வளவு பாதிப்பு இருந்திருக்காது. இந்த சம்பவம் குறித்து உண்மையான விசாரணை நடந்தால் மட்டுமே பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும்.
ஆணையத்தின் சார்பில் இதுதான் என்னுடைய வேண்டுகோளாக இருக்கிறது. இறந்தவர்கள் குடும்பத்தினருக்கு அரசு வேலை நிச்சயமாக கிடைக்க வேண்டும். பெரும்பாலனோர் இளம் வயதினர். ஏழை குடும்பத்தினர்.சம்பவம் குறித்து முழுமையான அறிக்கை கேட்டிருக்கிறோம். அறிக்கை கிடைத்த பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுப்போம்" என்றார்.