கரூர் துயரம் : பொறுப்பற்ற கருத்துகளை தவிர்க்க வேண்டும் - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்..!
கரூரில் நேற்று முன்தினம் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டது. இந்த நெரிசலில் சிக்கி பெண்கள் குழந்தைகள் உட்பட 40 பேர் பலியாகினர். மேலும் படுகாயம் அடைந்து பல பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இச்சம்பவம் தமிழகம் மட்டுமல்லாது நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இச்சம்பவம் தொடர்பாக விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக பொறுப்பற்ற கருத்துகளை தவிர்க்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில்
”ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலையிலான விசாரணை ஆணையத்தின் அறிக்கை கிடைத்த பிறகு , அனைத்து அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தி, கூட்ட நெரிசல்களை தவிர்க்க விதிகள் மற்றும் நெறிமுறைகள் வகுக்கப்படும் என உறுதியளிக்கிறேன்; அதற்கு எல்லோரும் ஒத்துழைப்பு தருவார்கள் என நம்புகிறேன்
இதனிடையே சமூக வலைதளங்களில் பரப்பப்படும் செய்திகளை பார்த்து வருகிறேன். எந்த அரசியல் கட்சித் தலைவரும் தொண்டர்கள், அப்பாவி மக்கள் இறப்பதை விரும்ப மாட்டார்கள். இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், என்னைப் பொருத்தவரை அவர்கள் தமிழ் உறவுகள். சோகமும் துயரமும் சூழ்ந்திருக்கும் சூழலில், பொறுப்பற்ற விஷமத்தன்மையான கருத்துகளை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
மனித உயிர்களே மேலானது; மானுடப்பற்றே அனைவரும் வேண்டியது ; அரசியல் மற்றும் கொள்கை முரண்பாடுகள், தனிமனித பகை என அனைத்தையும் விலக்கி வைத்துவிட்டு எல்லோரும் மக்களுடைய நலனுக்காக சிந்தியுங்கள்; தமிழ்நாடு நாட்டுக்கு பல வகையில் முன்னோடியாக இருந்திருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.