உச்ச நீதிமன்றத்தில் கரூர் கூட்ட நெரிசல் வழக்கு : பாதிக்கப்பட்டவர்களின் வாதம் என்ன..?
கரூரில் கடந்த 27ம் தேதி தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். மேலும் 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து தமிழ் நாடு அரசு ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையத்தை அமைத்தது.
மேலும் கரூர் கூட்ட நெரிசல் தொடர்பான வழக்கு ஒன்றை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் கரூர் கூட்ட நெரிசல் குறித்து விசாரிக்க ஐ.ஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு விசாரணை குழுவையும் அமைத்தது.
இந்த நிலையில் கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தவெக மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் 5 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த 5 வழக்குகளும் இன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.கே.மகேஸ்வரி, என்.வி.அஞ்சாரியா அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது கூட்ட நெரிசலில் உயிரிழந்த சிறுவன் தந்தை பன்னீர் செல்வம் தரப்பில்
இந்த கரூர் சம்பவத்தில் என்னுடைய மகன் உயிரிழந்துள்ளார். அரசு ஒரு விசாரணை ஆணையத்தை அமைத்து இருக்கிறது உயர் நீதிமன்றம் ஒரு சிறப்பு விசாரணை குழுவை அமைத்திருக்கிறது ஆனால் இந்த ஆணையத்தின் மீதும் சிறப்பு விசாரணை குழு மீதும் தனக்கு நம்பிக்கை இல்லை. அதனால் இந்த வழக்கை சிபிஐ விசாரித்தால் மட்டுமே முழு உண்மையும் வெளிவரும். பாதிக்கப்பட்டவர் என்ற முறையில் நான் இந்த மனுவை தாக்கல் செய்திருக்கிறேன். என்னுடைய மகனின் மரணத்திற்கு உண்மையான காரணங்கள் வெளிவர வேண்டும். இந்த விவகாரத்தில் பரஸ்பரம் குற்றம் சாட்டும் வகையிலேயே இருந்து கொண்டிருக்கின்றது. அதனால் உண்மை நிலை அறிய வேண்டும் என்றால் மத்திய விசாரணை அமைப்புகள் விசாரணை நடத்த வேண்டும். அதன் அடிப்படையில் தான் சிபிஐ விசாரணைக்கு கோரிக்கை வைக்கிறேன்.
அடுத்ததாக கூட்ட நெரிசலில் உயிரிழந்த சந்திரா என்பவரது கணவர் தரப்பில்
கரூர் பிரச்சாரக் கூட்டத்திற்கு 600 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்கள் என்று அரசு கூறுகிறது. ஆனால் அவர்கள் எங்கிருந்தார்கள் என்பது தெரியவில்லை. இதில் பல்வேறு குழப்பங்கள் உள்ளன பல சமூக விரோத சக்திகளும் இதில் உள்ள இறங்கி இருக்கிறார்கள் என்று தோன்றுகிறது. எனவே தான் இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை வேண்டும் என்று கோருகிறோம். விபத்தில் ஒரு போலீசார் கூட காயமடையவில்லை என்று வாதிடப்பட்டது.
மேலும் மனுதாரர் பிரபாகரன் தரப்பில்
விஜய் பிரச்சார கூட்டத்தில் இதுபோன்ற கூட்ட நெரிசல் நடைபெற உள்ளது என பிற்பகல் 3.15 அளவில் திமுக உறுப்பினர் ஒருவர் சமூக வலை தளத்தில் பதிவிட்டுள்ளார். அதன் பின்னர் தான் இந்த சம்பவம் நடந்தது . பதிவிட்ட நபர் முன்னாள் அமைச்சரான செந்தில் பாலாஜிக்கு தொடர்புடையவர். கரூர் பரப்புரை கூட்டத்தில் எவ்வளவு மக்கள் கூடுவார்கள் என்று கணிக்க காவல்துறை மற்றும் உளவுத்துறை தவறிவிட்டன.இந்த விவகாரத்தை பொறுத்தவரைக்கும் காவலதுறையின் முழு தோல்வி என்பது காட்டுகிறது என்று வாதிடப்பட்டது.