கரூர் சம்பவம் | என்.ஆனந்த், நிர்மல்குமார் முன்ஜாமின் கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு!
கரூரில் கடந்த 27ம் தேதி தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். மேலும் 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து கூட்ட நெரிசலுக்கு உண்மையான காரணம் என்ன? என்பதை கண்டறிய தமிழக அரசு ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் ஆணையத்தை அமைத்தது. அதன்படி, ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.
கரூர் போலீசாரும் இந்த சம்பவம் தொடர்பாக தவெக நிர்வாகிகள் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து இருவரை கைது செய்தனர். இதற்கிடையே, அக்கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த், இணை பொதுச் செயலாளர் நிர்மல்குமார் ஆகியோர் முன்ஜாமின் கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனுதாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் மீதான விசாரணை நீதிபதி ஜோதிராமன் தலைமையில் நேற்று முன்தினம் நடைபெற்றது.
மனுதாரர்கள் தரப்பு வழக்கறிஞர், மரணத்தை ஏற்படுத்த வேண்டுமென்ற நோக்கம் இல்லை என்று கூறி முன்ஜாமின் கோரினார். தொடர்ந்து, அரசு தரப்பு வழக்கறிஞர், மனுதாரர்கள் இருவரே அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளனர் என்றும், கட்சியினரால் தான் அவர்களின் தொண்டர்களைக் கட்டுப்படுத்த இயலும், அது போன்ற அறிவிப்பை அவர்கள் செய்யவில்லை, விசாரணை செய்தால் மட்டுமே உண்மை தெரியவரும் என்று கூறி முன்ஜாமின் வழங்க கூடாது என வாதிட்டார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜோதிராமன், முன் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இந்த நிலையில், என்.ஆனந்த் மற்றும் நிர்மல் குமார் ஆகியோர் முன்ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த முன்ஜாமின் மனுவை விரைந்து விசாரணைக்கு எடுக்க கோரி நாளை முறையீடு வைக்கவும் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.