“கருணாநிதி எனக்கும், கட்சி நிர்வாகிகளுக்கும் தந்தையும், தாயுமாக விளங்கினார்” - முதலமைச்சர் #MKStalin பேச்சு!
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தனக்கு தந்தை மட்டுமல்ல தாயும் அவர் தான் எனவும், கட்சி நிர்வாகிகள் அனைவருக்கும் அவர் தாயாகவும், தந்தையாகவும் விளங்கினார் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை கலைவாணர் அரங்கில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு எழுதிய “கலைஞர் எனும் தாய்” என்ற நூலை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். இந்நிகழ்வில் முதல் நூலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட, நடிகர் ரஜினிகாந்த் அந்நூலை பெற்றுக் கொண்டார். மேலும் இந்நிகழ்வில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த விழா மேடையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “கலைஞர் நூற்றாண்டு விழாவில் கருணாநிதி பங்கேற்கவில்லை என்ற ஏக்கம் இதுவரை இருந்தது. ஆனால் இன்றைக்கு எனக்கு அந்த ஏக்கம் இல்லை. அந்த அளவிற்கு சிறப்பாக இந்த நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த புத்தகத்தின் தலைப்பிலேயே எல்லாம் இடம்பெற்றுள்ளது. கருணாநிதி எனக்கு தந்தை மட்டுமல்லாமல், தாயும் அவர் தான். எனக்கு மட்டும் இல்லாமல் கட்சி நிர்வாகிகள் எல்லோருக்கும் அவர் தாய், தந்தையாக விளங்கினார்.
ஏ.வ.வேலு என்றால் எதிலும் வல்லவர் என்று பாராட்டுவார் கருணாநிதி. ஏ.வ.வேலு உணவுத்துறையின் அமைச்சராக இருந்த போது சிறப்பாக செயல்பட்டதை முன்னிட்டு அவரைப்போல அனைத்து அமைச்சர்களும் மாற வேண்டும் என்று கூறியவர் தான் கருணாநிதி. அவர் சிறப்பாக செயல்பட்டதை முன்னிட்டு தான் அவருக்கு பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை கொடுத்தேன். கருணாநிதி நினைவிடத்தை செதுக்கியவரும் அவர்தான்.
தற்போது பல்வேறு துறைகள் ஏ.வ.வேலுவிடம் உள்ளது. அவர் ஒரு திரைப்படம் எடுத்துள்ளார். சினிமாவிலும் நடித்துள்ளார். எந்த வேலை கொடுத்தாலும் சிறப்பாக செய்யக்கூடிய திறமை அவருக்கு உள்ளது. எழுத்திலும் வல்லவர் என்று இன்றைக்கு நிரூபித்துக் காட்டியுள்ளார். கருணாநிதி சிறையில் இருக்கும் பொழுது கட்சி நிர்வாகிகளை சந்தித்த பிறகுதான் என்னை சந்தித்தார். உயிருக்கும் மேலாக என் கட்சி உடன்பிறப்புகள் என்று நினைத்தவர் தான் கருணாநிதி.
இந்திய வரைபடத்தில் இல்லாத ஒருவருக்கு, இந்தியாவே ஒரு நினைவு நாணயம் வெளியிட்டுள்ளது. என்னை விட நடிகர் ரஜினிகாந்த் வயதில் மூத்தவர் தான். எனக்கு அவர் சில அறிவுரைகள் வழங்கினார். அதனை நான் புரிந்து கொண்டேன். பயப்பட வேண்டாம். எதிலும் நான் தவறிவிட மாட்டேன்”
இவ்வாறு தெரிவித்துள்ளார்.