கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவு - ரூ.100 நாணயம் வெளியிடுகிறார் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்!
மறைந்த முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவை ஒட்டி சென்னை கலைவாணர் அரங்கில் ரூ.100 நாணயம் வெளியிடுகிறார் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்.
மறைந்த முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா அரசு சார்பிலும், திமுக சார்பிலும் பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் கொண்டாடப்பட்டு வருகிறது. நூற்றாண்டை முன்னிட்டு, பல்வேறு திட்டங்களையும் தமிழக அரசு அறிவித்து செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில், கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவை முன்னிட்டு, அவரது உருவம் பொறிக்கப்பட்ட நாணயத்தை வெளியிட மத்திய அரசு ஒப்புதல் அளித்து, கடந்த ஜூன் 4-ம் தேதி ரூ.100 மதிப்பிலான நாணயம் வெளியிடப்பட்டது.
இந்த நாணயத்தை அதிகாரப்பூர்வமாக ஆக.18-ம் தேதி சென்னை கலைவாணர் அரங்கில், தமிழ்நாடு அரசு சார்பில் நடைபெறும் விழாவில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிடுகிறார். இவ்விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், திமுக நிர்வாகிகள், கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.
மேலும், எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, கூட்டணி கட்சி தலைவர்கள் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதோடு, ரஜினி, கமல் உள்ளிட்ட திரை பிரபலங்களும் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.