தமிழ்நாட்டில் பல்வேறு கோயிலில் வெகு விமரிசையாக நடைபெற்ற கார்த்திகை மகா தீபம் ஏற்றும் நிகழ்வு!...
தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு கோயில்களில் கார்த்திகை மகா தீபம் ஏற்றும் நிகழ்வு விமரிசையாக நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி மலைக்கோயிலில் கார்த்திகை திருநாளையொட்டி மகாதீபம் ஏற்றப்பட்டது. முன்னதாக தண்டாயுதபாணி சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடத்தப்பட்டது. தொடர்ந்து சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சியும் விமரிசையாக நடைபெற்றது. இந்த விழாவில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று பக்தி முழக்கத்துடன் சாமி தரிசனம் செய்தனர்.
மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் கார்த்திகை தீபம் ஏற்றும் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. உச்சி விநாயகர் கோயில் மேடையில் மூன்றரை அடி உயரம், ஒன்றரை அடி அகல கொப்பரையில் 300 லிட்டர் நெய் மற்றும் 150 மீட்டர் காடா துணி கொண்டு தீபம் ஏற்றப்பட்டது. விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அரோகரா முழக்கத்துடன் சாமி தரிசனம் செய்தனர்.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கைலாசநாதர் மலைக் கோயிலில் 500 கிலோ நெய் ஊற்றி மேள தாளங்களுடன் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. தொடர்ந்து சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்வும் விமரிசையாக நடைபெற்றது.
திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோயிலில் கார்த்திகை தீபம் ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது. தாயுமானவர் சுவாமி ஆலயத்தில் இருந்து மட்டுவார் குழலம்மை, தாயுமானவர் உள்ளிட்ட சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் மகாதீபம் ஏற்றப்படும் இடத்திற்கு கொண்டு வரப்பட்டு, பின்னர் 300 மீட்டர் நீளமுள்ள திரியில் தீபம் ஏற்றப்பட்டது.