கார்த்திகை தீபத் திருவிழா | பக்தர்கள் வெள்ளத்தில் மிதக்கும் #Tiruvannamalai... தயார் நிலையில் தேசிய பேரிடர் மீட்பு படை!
திருவண்ணாமலை மகா தீபத்தை காண ஏராளமான பக்தர்கள் குவிந்து வரும் நிலையில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் உள்ளனர்.
பஞ்சபூத அக்னி ஸ்தலமாக விளங்கக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 4ம் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கி வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. இந்த விழாவின் சிகர நிகழ்வான மகா கார்த்திகை தீபத்திருவிழா இன்று (டிச.13) கொண்டாடப்பட உள்ளது. இந்த நாளில் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபம் ஏற்றப்படுவது வழக்கம்.
இதனை முன்னிட்டு, மகா தீபத்திற்காக பயன்படுத்தப்படும் தீபக்கொப்பரைக்கு நேற்று கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. பின்னர் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் ஊழியர்கள் தீபக்கொப்பரையை மலை உச்சிக்கு கொண்டு சென்றனர். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துக்கொண்டனர். இதனைத் தொடர்ந்து, மாலை 6 மணியளவில் 2 ஆயிரத்து 668 அடி உயரத்தில் மலை மீது மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது. இந்நிலையில், மகா கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு இன்று (டிச.13) அதிகாலை 3.30 மணியளவில் கோயில் மூலவர் சன்னிதியில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.
இந்த கார்த்திகை தீபத் திருவிழாவில் 40 லட்சம் பக்தர்கள் கலந்துக்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்களின் வசதிக்காக திருவண்ணாமலைக்கு 3,408 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதேபோல், சென்னை, விழுப்புரம் மார்க்கமாக 30 சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன. மகா தீபத்தை காண அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் குவியத் தொடங்கி உள்ள நிலையில் திருவண்ணாமலை பக்தர்கள் வெள்ளத்தில் சூழ்ந்துள்ளது.
மேலும், திருவண்ணாமலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க போக்குவரத்து வசதி மாற்றம் செய்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதேபோல, கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைக்காக தேசிய பேரிடர் மீட்புப் படையின் கமாண்டர் தீபர் தலைமையிலான இரண்டு பெண்கள் உட்பட 30 பேர் கொண்ட குழு தயார் நிலையில் உள்ளனர்.
தீபத் திருவிழாவைக் காண வரும் பக்தர்கள் வசதிக்காக பேருந்து, தங்குமிடம், உணவு, குடிநீர் என பல்வேறு வசதிகளை மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. அதேபோல, கூட்டத்தில் குழந்தைகள் தொலைந்துவிடக் கூடாது என்பதால் குழந்தையின் பெயர், முகவரி, பெற்றோரின் தொலைபேசி எண் ஆகியவை அடங்கிய டேக் ஒன்று குழந்தைகளின் கையில் போலீஸார் கட்டி வருகின்றனர். கூட்டத்தில் குழந்தைகள் தொலைந்து போனால் அவர்களை இந்த டேக் மூலம் எளிமையாகக் கண்டறியலாம் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.