டாணாக்காரன் இயக்குனருடன் கைக்கோர்க்கும் கார்த்தி? - லேட்டஸ்ட் அப்டேட்!
கார்த்தி கமிட்டாகியுள்ள கார்த்தி 29 படத்தின் தகவல்களும் வெளியாகியுள்ளன.
பருத்திவீரன் படத்தில் நாயகனாக அறிமுகமாகிய கார்த்தியின் 25 ஆவது படமாக கடந்த ஆண்டு வெளியானது ஜப்பான். இப்படம் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை என்றாலும் பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் அடுத்தடுத்த படங்களை நோக்கி நகர்ந்துவிட்டார் கார்த்தி. தற்போது கார்த்தி மெய்யழகன் மற்றும் வா வாத்தியார் என் இரு படங்களில் நடித்து வருகிறார். அடுத்தபடியாக பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் சர்தார் 2 படத்தில் கார்த்தி நடிக்க இருக்கிறார். இந்நிலையில் கார்த்தியின் 29 ஆவது படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் கார்த்தி தனது 29ஆவது படத்தில் டாணாக்காரன் பட இயக்குநர் தமிழுடன் இணைகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு அக்டோபரில் தொடங்கும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கார்த்தி நடித்த கைதி , ஜப்பான் ஆகிய படங்களை தயாரித்த ட்ரீம் வாரியர் பிக்ஸர்ஸ் இப்படத்தை தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர் இயக்குநர் தமிழ் , அசுரன் , ஜெய் பீம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் இயக்கிய டாணாக்காரன் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியானது. காவல் துறை பயிற்சி மையத்தினை மையமாக வைத்து உருவான டாணாக்காரன் படம் மக்களிடமும் விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து தமிழின் இரண்டாவது படம் குறித்த எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருந்து வந்தது. தற்போது கார்த்தியை வைத்து அவர் இயக்கப்போகும் படமும் முதல் படத்தைப் போல் மிக சுவாரஸ்யமான ஒரு கதைக்களமாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.