பவன் கல்யாணிடம் மன்னிப்பு கேட்ட #Karthi... காரணம் என்ன?
லட்டு குறித்து பேசியதற்காக ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாணிடம் நடிகர் கார்த்தி மன்னிப்பு கோரினார்.
பிரேம்குமார் இயக்கத்தில் விஜய்சேதுபதி – த்ரிஷா நடித்து கடந்த 2018-ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ‘96’. இந்த திரைப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது 6 ஆண்டுகளுக்குப் பின் பிரேம்குமார், நடிகர் கார்த்தியை வைத்து புதிய திரைப்படத்தை இயக்கியுள்ளார். ‘மெய்யழகன்’ என பெயரிடப்பட்டுள்ள இந்த திரைப்படத்தில் நடிகர் அரவிந்தசாமி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் ஸ்ரீதிவ்யா, ராஜ்கிரண் போன்றோர் நடித்துள்ளனர். இது கார்த்தியின் 27வது படமாகும்.
இந்த திரைப்படத்தை 2டி நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம் வரும் 27-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா, ஆகஸ்ட் 31-ம் தேதி கோவை கொடிசியா ஹாலில் நடைபெற்றது. 96 திரைப்படத்திற்கு இசையமைத்த கோவிந்த் வசந்தா இப்படத்திற்கும் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள அனைத்து பாடல்களும் வெளியாகி சிறந்த வரவேற்பை பெற்றது.
இப்படமும் 96 திரைப்படத்தைப்போல் ஓர் இரவில் நடக்கும் கதையாக கதைக்களம் அமைந்துள்ளது. திரைப்படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. இப்படம் தெலுங்கில் ’சத்யம் சுந்தரம்’ என்கிற பெயரில் வெளியாகிறது. இந்த நிலையில் மெய்யழகன் படத்தின் தெலுங்கு புரமோஷன் நிகழ்வு ஹைதராபாத்தில் நேற்று (செப். 23) நடைபெற்றது. இந்நிகழ்வில், தொகுப்பாளர் நடிகர் கார்த்தியிடம், ’உங்களுக்கு லட்டு வேணுமா?’ எனக் கேட்டார். அதற்கு, கார்த்தி ‘இங்கு லட்டு குறித்து பேச வேண்டாம். உணர்ச்சிமிக்க விஷயம். லட்டு வேண்டாம் தவிர்த்துவிடுவோம்” என்றார். இதனைக்கேட்ட அனைவரும் சிரித்தனர்.
இதனையடுத்து, ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், ”சினிமா நிகழ்வில் லட்டுவைக் கிண்டலடிப்பீர்களா? லட்டு உணர்ச்சிமிக்க விஷயமாம். ஒருபோதும் அப்படி சொல்லாதீர்கள். நடிகர்களாக மரியாதை கொடுக்கிறேன். ஆனால், சனாதான தர்மம் என வரும்போது பேசும் வார்த்தையை நூறுமுறை யோசித்து பேச வேண்டும்” என தெரிவித்தார்.
இந்த சூழலில், நடிகர் கார்த்தி தனது எக்ஸ் தள பக்கத்தில் இதற்கு மன்னிப்பு கோரியுள்ளார். அதில், “உங்கள் மீது மிகுந்த மதிப்பு வைத்திருக்கிறேன். நான் பேசியது எதாவது தவறாக புரிந்துகொள்ளப்பட்டிருந்தால் அதற்காக மன்னிப்புக் கேட்கிறேன். வெங்கடேஸ்வரரின் பக்தனாக, பண்பாட்டின் மீது எப்போதும் பிடிப்புடனே இருக்கிறேன். வாழ்த்துகள்.”
இவ்வாறு நடிகர் கார்த்தி பதிவிட்டுள்ளார்.