”கர்நாடகத்தின் செயல்பாடு ஜனநாயகத்துக்கு நல்லதல்ல!”- நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் குற்றச்சாட்டு!
தமிழ்நாட்டிற்கு 16,000 கனஅடி நீரை வழங்கக் கோரி காவிரி நீர் மேலாண்மை குழு கூட்டத்தில் முறையிட்டும் நீதி கிடைக்கவில்லை என்றால் நீதிமன்றத்தை நாடுவோம் என அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.
காவிரியில் நாளை முதல் 15 நாட்களுக்கு தமிழ்நாட்டிற்கு விநாடிக்கு 2600கன அடி
நீர் திறக்க காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில் நேற்று பரிந்துரைக்கப்பட்டது. இந்த நிலையில் வரும் 3-ஆம் தேதி காவிரி மேலாண்மை குழு கூட்டம் கூட உள்ளது.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறியதாவது;
காவிரி ஒழுங்காற்று குழு ஒழுங்காக பணியாற்றவில்லை. காரணம் நாளொன்றுக்கு
13,000 கன அடி தண்ணீர் திறந்து விடச் சொல்லி கேட்டிருந்தோம், ஆனால் 2600 கன அடி
தண்ணீர் திறந்து விடுகிறோம் என கூறியிருக்கிறார்கள். காவிரி நீர் மேலாண்மை
குழு மூன்றாம் தேதி கூடுகிறது, அவர்களிடம் மேல் முறையீடு செய்ய வேண்டும்,
அல்லது நீதிமன்றம் செல்ல வேண்டும்.
26.10.2022 வரை 140டி.எம்.சி தண்ணீர் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டியுள்ளது. ஆனால் அவர்கள் வழங்கியது 56.4 டி.எம்.சி நீர் மட்டுமே. பற்றாக்குறை 83.6 டி.எம்.சியாக உள்ளது. குறைபாடு விகித்தாசாரம் நிலுவை 13.03 டி.எம்.சி கொடுக்க வேண்டும், அதில் 3.41 டி.எம்.சி நீர் தான் கொடுத்து இருக்கிறார்கள். குறைபாடு விகிதாசாரம் என நவம்பர் மாதம் கொடுக்க வேண்டியது 16.44 டி.எம்.சி நீர், அதனையும் கொடுக்கவில்லை.
இதுவரை இருந்த எந்த அரசும் இப்படி முரண் பிடித்தது இல்லை, எதிரி நாட்டோடு
சண்டை பிடிப்பது போல நடந்து கொள்கிறார்கள், நாம் ஏதோ சலுகை கேட்பது போல
நினைக்கிறார்கள். இந்த நாட்டின் உச்ச நீதிமன்றம் விதிக்கும் விதிமுறை படி அனைத்து மக்களும் நடக்க வேண்டும், ஆனால் ஒரு மாநிலத்தின் அரசாங்கமே அப்படி
நடந்துகொள்ளவில்லை என்பது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல.
10 முதலமைச்சரை பார்த்துள்ளேன், நீர்வளத்துறை அமைச்சர்களை பார்த்துள்ளேன்.
சித்தராமையா எனக்கும் தலைவருக்கும் வேண்டியவர். நீர் பாசனத்துறை
அமைச்சர் டி.கே.சிவக்குமார் எனக்கு தெரிந்தவர். ஆனால் இவர்கள் இப்பொழுது
பிடிவாதத்தில் இருப்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.
3ஆம் தேதி காவிரி நீர் மேலாண்மை குழு கூடுகிறது. அப்போது 16 ஆயிரம் கன அடி தண்ணீர் தர வலியுறுத்தப்படும். அங்கும் நீதி கிடைக்க வில்லை என்றால் நீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம். காவிரி நீர் விவகாரத்தில் மத்திய அரசு தொடர்ந்து மெத்தனம் காட்டுகிறது.
தொடர்ந்து ஆளுநர் நடவடிக்கை குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் துரைமுருகன், இது ஒரு ஜனநாயக நாடு இந்த நாட்டில் அனைவரும் அரசியல் அமைப்புப்படி நடந்துக் கொள்ள வேண்டும், ஆனால் பெரியவர்களாக இருப்பதால் சிலர் அரசியல் அமைப்பின்படி நடந்து கொள்ள மாட்டேன் என சொல்வது தவறானது. பெரிய பொறுப்பில் இருப்பவர்கள் சட்டத்தை மதிக்க மாட்டேன் என கூறினால், சாதாரண மக்கள் எப்படி சட்டத்தை மதிப்பார்கள்? ஆளுநரின் போக்கை மத்திய உள்துறை அமைச்சர் மற்றும் பிரதமர் வேடிக்கை பார்ப்பது சரியில்லை.
இவ்வாறு அமைச்சர் துரைமுருகன் கூறினார்.