கர்நாடகா: இன்று நள்ளிரவு முதல் லாரிகள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம்!
கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் கடந்த 6 ம் தேதி லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் சண்முகப்பா தலைமையில் லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் சங்க நிர்வாகிகள் பேசுகையில், கர்நாடகாவில் கடந்த 1ம் தேதியில் இருந்தே சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. ஏற்கனவே லாரிகளுக்கான டயர்கள், பிற உதிரி பாகங்கள் விலை, காப்பீட்டு கட்டணம் உள்ளிட்டவையும் அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. இதுபோன்ற காரணங்களால் தினம், தினம் லாரிகளை பராமரித்து இயக்குவதே உரிமையாளர்களுக்கு மிகப்பெரிய சவாலாக மாறியுள்ளது.
இதனை நம்பி வாழ்க்கை நடத்தும் லாரி உரிமையாளர்கள், ஓட்டுனர்கள், கிளீனர்களின் வாழ்க்கை கேள்வி குறியாகி உள்ளது. அதனால் தான் டீசல் விலை, சுங்க கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என்று வருகிற 14ம் தேதிக்குள் (இன்று) கர்நாடக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் 14ம் தேதி நள்ளிரவு முதல் லாரிகள் காலவரையற்ற போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்திருந்தனர்.
இதனால் தமிழ்நாடு, கேரளா உள்பட வெளிமாநில லாரிகளும் வராது. லாரிகள் உரிமையாளர்கள் சங்கத்தினரின் கோரிக்கையை நேற்று வரை கர்நாடக அரசு பரிசீலிக்கவில்லை. இதனால் திட்டமிட்டப்படி இன்று (திங்கட்கிழமை) நள்ளிரவு முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் தொடங்குவதாக கர்நாடக லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். லாரி உரிமையாளர்கள் போராட்டம் நடைபெற உள்ளதால் மாநிலத்தில் காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.