முஸ்லிம்களுக்கு 4% இட ஒதுக்கீடு : 18 பாஜக எம்எல்ஏக்கள் இடைநீக்கத்துக்கு மத்தியில் மசோதா நிறைவேற்றம்!
கர்நாடக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்து மூன்றாம் தேதி தொடங்கியது. இன்று 15 வது நாளாக சட்டப்பேரவை கூட்டம் நடைபெற்றது. இந்நிலையில் ஹனி ட்ராப்பில் அரசியல் தலைவர்களை சிக்க வைக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக கூறி பாஜக எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து சபாநாயகர் இருக்கை முன் திரண்ட பாஜக எம்எல்ஏக்கள் காகிதங்களை கிழித்து வீசினர். அப்போது ஹனி ட்ராப் விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், இதில் யாரையும் பாதுகாக்கும் நோக்கம் இல்லை என்றும் முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்தார்.
ஆனால் அதனை ஏற்க மறுத்த பாஜக எம்எல்ஏக்கள், சித்தராமையாவின் உரையை தடுக்கும் வகையில் செயல்பட்டனர். தொடர்ந்து கர்நாடக அரசுக்கு எதிராக முழுக்கமிட்டனர். இதனால் கர்நாடக சட்டப்பேரவையில் கடும் அமளி ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து பாஜக எம்எல்ஏக்கள் அனைவரும் அவைக் காவலர்கள் மூலம் குண்டுக்கட்டாக அவையில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
இந்நிலையில் சட்டப்பேரவையில் சபாநாயகர் முன் காகிதங்களை கிழித்து வீசி அவையின் மாண்புக்கு குந்தகம் ஏற்படுத்திய புகாரில் பாஜக எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கர்நாடக சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்ட எம்எல்ஏக்கள் 18 பேர் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் பாஜக எம்எல்ஏக்கள் 18 பேரும் 6 மாதங்களுக்கு கர்நடாக சட்டப்பேரவை நடவடிக்கையில் பங்கேற்கவும், அவைக்கு வரவும் தடை விதித்து சபாநாயகர் காதர் உத்தரவிட்டுள்ளார். மேலும் பாஜக எம்எல்ஏக்கள் 18 பேரை ஆறு மாதம் இடைநீக்கம் செய்து கர்நாடக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மேலும் பாஜக எம்எல்ஏக்கள் இடைநீக்கத்திற்கு அரசு ஒப்பந்தங்களில் முஸ்லிம்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவை கர்நாடக சட்டப்பேரவை நிறைவேற்றியது.
கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ், அரசு ஒப்பந்தங்களில் முஸ்லிம்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என தெரிவித்தது. 4 சதவீத ஒதுக்கீட்டிற்கான சட்ட திருத்த மசோதாவுக்கு கர்நாடக அமைச்சரவை கடந்த 14ஆம் தேதி ஒப்புதல் வழங்கியது. இது ரூ.2 கோடி வரை மதிப்புள்ள (சிவில்) பணிகளில் 4 சதவீத ஒப்பந்தங்களையும், ரூ.1 கோடி வரையிலான goods/services ஒப்பந்தங்களையும் முஸ்லிம்களுக்கு ஒதுக்குகிறது.
இந்நிலையில் பாஜகவின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் பொது ஒப்பந்தங்களில் முஸ்லிம்களுக்கு நான்கு சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவை கர்நாடக சட்டமன்றம் இன்று நிறைவேற்றியது.