#Karnataka: தனியார் பீச் ரிசார்ட் நீச்சல் குளத்தில் மூழ்கி 3 இளம்பெண்கள் உயிரிழப்பு!
மங்களூரு அருகே தனியாருக்கு சொந்தமான பீச் ரிசார்ட் நீச்சல் குளத்தில் மூழ்கி 3 இளம்பெண்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் மங்களூரு புறநகரில் உள்ள, உச்சிலா கடற்கரைக்கு அருகே உள்ள தனியார் ரிசார்ட்க்கு சொந்தமான நீச்சல் குளத்தில், மைசூரை சேர்ந்த மூன்று இளம்பெண்கள் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்கள் மைசூர் குருபரஹள்ளியைச் சேர்ந்த கீர்த்தனா (21), ராமானுஜ சாலையை சேர்ந்த நிஷிதா (21) மற்றும் விஜய் நகர் பகுதியைச் சேர்ந்த பார்வதி (20) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
நேற்று பீச் ரெசார்ட்டில் அறை எடுத்த மூவரும், இன்று காலை 8.30 மணிக்கு நீச்சல் குளத்திற்கு சென்று குளித்துள்ளனர். அப்போது மூவரில் ஒருவர் ரீல்ஸ் எடுப்பதற்காக போனை ஆன் செய்து வைத்துவிட்டு, ஆறடி ஆழம் கொண்ட குளத்தின் அடிப்பகுதிக்கு சென்றுள்ளார். அவர் நீரில் மூழ்கியதை பார்த்த மற்ற இருபெண்களும், அப்பெண்ணை காப்பாற்ற முயன்றுள்ளனர்.
இதனால் மூவரும் நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த உல்லால் காவல்துறையினர் மூவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பின்னர் இதுகுறித்து பெண்களின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்த போலீசார், ரிசார்ட்டில் இருந்த சிசிவிடி காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.