தேசிய கராத்தே போட்டி: 97 பதக்கங்களுடன் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றது தமிழ்நாடு!
சென்னை கோஜுரியு கராத்தே இந்தியா, ஆசிய உலக கூட்டமைப்புகள் இணைந்து, இரண்டாவது தேசிய கோஜுரியு கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியை, பஞ்சாப் மாநிலத்தின் கபுர்தலா மாவட்டத்தில் நடத்தின. இதில், தமிழகம், பஞ்சாப், கர்நாடகா, பீஹார், உத்தர பிரதேசம் உட்பட 13 மாநில அணிகள் பங்கேற்றன. ஆறு வயது முதல் 35 வயது வரை உள்ள வீரர்கள், 500க்கும் மேற்பட்டோர் போட்டியிட்டனர். இதில், தமிழகத்தைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கு பெற்றனர்.
இந்நிலையில் போட்டியில் கலந்துகொண்டு 34 தங்கம், 28 வெள்ளி, 35 வெண்கலம் என 97 பதக்கங்கள் வென்று ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை தமிழ்நாடு பெற்றுள்ளது. 2வது இடத்தில் கர்நாடகாவும், மூன்றாவது இடத்தில் பஞ்சாபும் உள்ளன. 13 மாநிலங்களைச் சேர்ந்த வீரர்களோடு மோதி ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் கோப்பையையும் வென்றெடுத்த தமிழக வீரர்கள் இன்று தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் சென்னை திரும்பினர். சென்னை திரும்பிய வீரர்கள் சென்னை சென்ட்ரல் நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய GOJU RYU கராத்தே சங்கத்தின்
செயலாளர் ஈஸ்வரன்,
“இந்த கராத்தே போட்டியில் தமிழகத்தில் இருந்து 106 மாணவர்கள் பங்கேற்றனர்.
அதில் 94 மாணவர்கள் பதக்கம் வென்று இருக்கிறார்கள். குறிப்பாக 34 தங்கம், 28
வெள்ளி, 35 வெண்கலம் ஆகிய பதக்கங்களை வென்று ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் கோப்பையை தமிழ்நாடு பெற்றுள்ளது. 13 மாநில மாணவர்கள் இப்போட்டியில் பங்கேற்றனர்.
மேலும் தமிழகத்தில் நடைபெறும் CM Trophy போட்டியில் கராத்தே போட்டிகள் இல்லை. கடந்த 4 ஆண்டுகளாக தான் கராத்தே போட்டி இல்லாமல் உள்ளது. எனவே முதலமைச்சர் கோப்பையில் கராத்தே போட்டியை சேர்க்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம். எங்களுக்கான அங்கீகாரம் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் தமிழக அரசு எங்களுக்கு மிகவும் குறைவாக தான் உறுதுணையாக இருக்கிறார்கள். அடுத்ததாக ஆசிய போடிக்களுக்கு தயாராகி வருகிறோம்” என தெரிவித்தார்.