காரையார் சொரிமுத்து அய்யனார் கோயில் - சிறப்பாக நடைபெற்ற 9ஆம் ஆண்டு திருமண வைபோக விழா!
காரையார் சொரிமுத்து அய்யனார் கோயிலில் பட்டவராயன் சுவாமியின் 9-ஆம் ஆண்டு திருமண வைபோக விழா வெகுசிறப்பாக நடைபெற்றது.
திருநெல்வேலி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ளது உலக புகழ் பெற்ற ஸ்ரீ சொரிமுத்து அய்யனார் திருக்கோயில். பிரசித்தி பெற்ற இத்திருக்கோயிலில் சொரிமுத்து அய்யனார், சங்கிலி பூத்தார் , மகாலிங்க சுவாமி, பட்டவராயன் சுவாமிகள் என எல்லா சுவாமிகளும் பக்தர்களுக்கு குல தெய்வமாகவும், காவல் தெய்வமாகவும் இருந்து அருள்புாிந்து வருகின்றனா்.
நாள்தோறும் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வழிபட்டு வருகின்றனர். வனப் பகுதியில் அமைந்துள்ள இத்திருக்கோயிலில் சுற்று வட்டார பக்தா்களின் பெரும் முயற்சியால் கடந்த 9 ஆண்டுகளாக சுவாமி திருமண வைபோகம் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் பங்குனி 18ம் நாளான இன்று பட்டவராயர் சுவாமி பங்குனி திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதற்காக பட்டவராயர சன்னதி முன்பாக நவ கலசங்கள் வைத்து ஹோமங்கள் நடைபெற்றது.
தொடர்ந்து பக்தா்கள் பலகாரங்கள், பழங்கள், பட்டு சேலைகள், வேஷ்டிகள் என
சீா்வரிசைகளை திருக்கோயில் சுற்றி ஊர்வலமாக எடுத்து வந்தனா். அதனை தொடா்ந்து சிறப்பு அலங்காரத்தில் காட்சி கொடுத்த பட்டவராயன் மற்றும் அவரது இரு மனைவிகளான பொம்மக்கா, திம்மக்கா ஆகியோருடன் திருமண சடங்குகள் நடைபெற்றன. காப்பு கட்டுதல், மாலை மாற்றுதல், புது வஸ்திரங்கள் அணிவித்தல் என சடங்குகள் நடைபெற்று பக்தா்களின் சரணகோஷங்களுடன் திருமாங்கல்யம் அணிவிக்கப்பட்டது.
அதனை தொடா்நது சிறப்பு தீபராதணை நடைபெற்று, வந்திருந்த பக்தா்களுக்கு மங்கல
பொருட்களான அட்சனை மஞ்சள், குங்குமம், மாங்கல்ய கயிறு வழங்கப்பட்டன.
சுவாமி திருமண விழாவில் சுமாா் 500 மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம்
செய்தனர்.