காரைக்கால் மாங்கனித் திருவிழா - பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று மாங்கனிகளை இறைத்து வழிபாடு!
காரைக்கால் மாங்கனி திருவிழாவில் உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி தமிழ்நாடு, கேரளா மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு மாங்கனிகளை இறைத்து வழிபாடு நடத்தினர்.
63 நாயன்மார்களில் சிறப்பான வரும், இ றைவனால் அம்மையே என்று அழைக்கப்பட்ட சிறப்பை பெற்றவருமான காரைக்கால் அம்மையாரின் வாழ்க்கை வரலாற்றை நினைவு கூறும் விதமாக காரைக்காலில் ஆண்டுதோறும் மாங்கனித்திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு மாங்கனி திருவிழா கடந்த 19ம் தேதி மாப்பிள்ளை அழைப்புடன் கோலாகலமாக தொடங்கியது.
நேற்று காரைக்கால் அம்மையார் என்றழைக்கப்படும் புனிதவதி தாயார், பரமதத்த செட்டியார் திருக்கல்யாண வைபவம் அதி விமர்சையாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இன்று முக்கிய நிகழ்வான மாங்கனி திருவிழா கைலாசநாதர் கோயிலில் வெகு விமர்சையாக நடைபெற்றது. சிவபெருமான் ‘பிஷாடன மூர்த்தி’ எனப்படும் பிச்சாண்ட மூர்த்தியாக எழுந்தருளி காட்சி அளித்து வருகிறார். சிவவாத்தியங்கள் முழங்க ஆலயத்தின் பிரகாரங்களை சுற்றி வந்தார். பின்பு காரைக்காலில் முக்கிய வீதிகளில் பிச்சாண்டவர் சாமி வீதி உலா சென்றுள்ளார்.
அப்பொழுது புனிதவதி தாயார் பிச்சாண்டவமூர்த்தி சுவாமிக்கு மாங்கனியை வழங்கியதை நினைவு கூறும் வகையில், வீதியுலா வரும் இறைவனுக்கு பக்தர்கள் மாங்கனிகளையும், வெண்பட்டு சாற்றியும் ஓம் நமச்சிவாய என்ற கோசங்கள் எழுப்பினர். தொடர்ந்து, மாடிகள் மற்றும் கட்டிடங்களின் உச்சிகளில் ஏறி நின்று, மாங்கனிகளை வீசி எறிந்து வேண்டுதல்களை நிறைவேற்றினர் . வீசி எறியப்பட்ட மாங்கனிகள், வானில் இருந்து மாங்கனி மழை பொழிவது போல் காணப்பட்டது.
இவற்றை ஆயிரக்கணக்கான பக்தர்கள் போட்டுக்கொண்டு பிடித்தனர். நிகழ்ச்சியில் புதுச்சேரி அமைச்சர் திருமுருகன், மாவட்ட ஆட்சியர் மணிகண்டன் ஆகியோர் கலந்து கொண்டு சிவபெருமானுக்கு மாங்கனி படைத்து வழிபாடு நடத்தினர்.
மேலும் திருவிழாவில் பிரெஞ்சு நாட்டை சேர்ந்தவர்கள், உள்ளூர் பக்தர்கள் மட்டும் இன்றி தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு மாங்கனி இறைத்து வழிபாட்டில் ஈடுபட்டனர். தொடர்ந்து இன்று மாலை காரைக்கால் அம்மையார் பிஷாடன மூர்த்தி என்று அழைக்கப்படும் பிச்சாண்டவ மூர்த்தியை எதிர்கொண்டு அமுது படையலுக்கு அழைத்து செல்லும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.