கிரிக்கெட் அரசியலால் “கபில்தேவ்” அழைக்கப்படவில்லை - மகாராஷ்டிர எதிர்க்கட்சித் தலைவர் குற்றச்சாட்டு!
கிரிக்கெட்டில் நடக்கும் அரசியல் காரணமாகவே கபில்தேவை இறுதிப் போட்டியைப் பார்ப்பதற்கு அழைக்கவில்லை என மகாராஷ்டிர மாநில எதிர்க்கட்சித் தலைவர் விஜய் வடேட்டிவார் தெரிவித்துளளார்.
முன்னதாக இந்த உலகக் கோப்பை இறுதிப்போட்டியைப் பார்ப்பதற்கு, ஏற்கனவே உலகக் கோப்பை வென்ற கேப்டன்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் இதற்கு இந்தியா அணிக்கு முதல் முறையாக உலகக் கோப்பை பெற்று தந்த கேப்டனான கபில்தேவ் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
"அகமதாபாத் வந்து உலகக் கோப்பை இறுதிப்போட்டி பார்ப்பதற்காக என்னை அழைக்கவில்லை. அதனால் நான் வரவில்லை. 1983-ல் விளையாடிய அணியினர் அனைவரும் என்னுடன் இருக்க வேண்டும் என்று நான் விரும்பினேன், ஆனால் இது ஒரு பெரிய நிகழ்வு என்பதாலும், மற்ற பொறுப்புகளைக் கையாளுவதில் மும்முரமாக இருப்பதாலும், இதை செய்ய மறந்திருக்கக்கூடும் என நினைக்கிறேன்" என்றார்.
இதையடுத்து இந்த சம்பவம் பெரும் சர்ச்சையான நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் எதிர்க்கட்சித் தலைவர் விஜய் வடேட்டிவார் கூறுகையில், "...இன்று எல்லா இடங்களிலும் அரசியல் இருக்கிறது... கிரிக்கெட்டிலும் அரசியல் நடக்கிறது. அதனாலே கபில் தேவ் அழைக்கப்படவில்லை..." என அவர் தெரிவித்துள்ளார்.